Anbumani : ஒரு பிழைக்கு மாற்றாக இன்னொரு பிழையா.? இனி இரண்டு நீட் தேர்வு நடத்துவதா.? சீறும் அன்புமணி

By Ajmal Khan  |  First Published Jul 21, 2024, 1:48 PM IST

நீட் தேர்வை இரு அடுக்குகள் கொண்டதாக மாற்றுவதன் மூலம் நீட் தேர்வு மேலும் கடுமையானதாக மாற்றப்படும். அதற்காக மாணவர்கள் கூடுதல் பயிற்சி எடுக்க வேண்டிய நிலை உருவாகும் என தெரிவித்துள்ள அன்புமணி.  அதனால், நீட் பயிற்சி வகுப்பு நடத்தும் நிறுவனங்கள் தான் செழிக்குமே தவிர மாணவர்களுக்கு பயன் ஏற்படாது என குற்றம்சாட்டியுள்ளார்.


இரண்டு முறை நீட் தேர்வு அறிமுகம்.?

நீட் முறைகேடுகளைத்  தடுப்பதற்காக இரட்டை அடுக்கு நீட் தேர்வை இரு அமைப்புகளின் மூலம் நடத்த மத்திய அரசு திட்டம் வகுத்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5&ஆம் நாள் நடைபெற்றது. அதில் வினாத்தாள் கசிவு தொடங்கி, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது வரை ஏராளமான முறைகேடுகள் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Tap to resize

Latest Videos

ஐஐடி மாணவர்கள் சேர்க்கை போல் நீட் தேர்வு

இத்தகைய சூழலில் தான் இரட்டை அடுக்கு நீட் தேர்வை, இரு தேர்வு அமைப்புகள் மூலம் நடத்துவது பற்றி மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய தொழில்நுட்பக் கழகங்களான ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்காக நடத்தபடும் கூட்டு நுழைவுத்தேர்வு  போன்று நீட் தேர்வையும் முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு ஆகிய இரு அடுக்குகளில் நடத்த மத்திய  அரசு திட்டமிட்டிருக்கிறது. முதனிலைத் தேர்வில் பங்கேற்பவர்களில் இருந்து, நாடு முழுவதும் உள்ள மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை விட 4 அல்லது 5 மடங்கு மாணவர்களை தேர்ந்தெடுத்து முதன்மைத்  தேர்வு நடத்துவது தான் மத்திய அரசின் திட்டம் ஆகும். இவற்றில் முதனிலைத் தேர்வை ஓர் அமைப்பின் மூலமாகவும், முதன்மைத் தேர்வை இன்னொரு அமைப்பின் மூலமாகவும் நடத்துவது குறித்தும் அரசு ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Sambo Senthil : யார் இந்த சம்போ செந்தில்.! ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு ஏற்பட்டது எப்படி.?

பயிற்சி மையங்கள் செழிக்கும்

மத்திய அரசின் இந்தத் திட்டம் எதிர்பார்க்கும் பயன்களைத் தராது. இரட்டை அடுக்கு நீட் தேர்வை அறிமுகம் செய்வதன் மூலம், நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க முடியாது. மேலும்,  நீட் தேர்வை இரு அடுக்குகள் கொண்டதாக மாற்றுவதன் மூலம் நீட் தேர்வு மேலும் கடுமையானதாக மாற்றப்படும். அதற்காக மாணவர்கள் கூடுதல் பயிற்சி எடுக்க வேண்டிய நிலை உருவாகும். அதனால், நீட் பயிற்சி வகுப்பு நடத்தும் நிறுவனங்கள் தான் செழிக்குமே தவிர மாணவர்களுக்கு பயன் ஏற்படாது.இதுவரை பயிற்சி பெறாமல், சொந்த முயற்சியில் நீட்  தேர்வை எதிர்கொண்டவர்களால் கூட, இனி இரட்டை அடுக்கு நீட்டை பயிற்சி இல்லாமல் எழுத முடியாது. அதனால், அனைத்து மாணவர்களும் நீட் பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்க வேண்டியிருக்கும். 

இரட்டை தேர்வு திட்டத்தை கை விடுக..

பயிற்சி இல்லாமல் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவும் முடியாது என்பதால் தான் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் வகையில், 12&ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. அத்தகைய சமவாய்ப்பை ஏற்படுத்தி தருவதை நோக்கி பயணிக்காமல், இரட்டை அடுக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு வாய்ப்பை முழுமையாக பறிப்பதை நோக்கி பயணிப்பது சமூக அநீதி.

ஒரு பிழைக்கு மாற்றாக இன்னொரு பிழை என்பதன் அடிப்படையில், ஓரடுக்கு நீட் தேர்வுக்கு பதிலாக இரட்டை அடுக்கு நீட் தேர்வை அறிமுகம் செய்வது சரியல்ல. எனவே, இந்தத் திட்டத்தை கைவிட்டு நீட் தேர்வை ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? திட்டங்களை பட்டியலிட்டு கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின்!!

click me!