15 அடங்காத காளைகளை அடக்கிய வீரத் தமிழன் !! கார், டிவி என குவிந்தது பரிசு மழை !!

By Selvanayagam PFirst Published Jan 18, 2019, 7:13 AM IST
Highlights

மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப் பாய்ந்து திமிறிய காளைகளை வீரர்கள் போட்டி போட்டு தழுவினர். இதில் 15 காளைகளைப்  திமில் பிடித்து அடக்கிய ரஞ்சித் குமார் என்ற வீரருக்கு கார் பரிசு  வழங்கப்பட்டது.

அலங்காநல்லூரில் இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 729 காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன. 714 வீரர்கள் களம் கண்டனர். துள்ளிக் குதித்து நின்று விளையாடிய காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு பிடிக்கப் பாய்ந்தனர். காளைகளுக்கும், வீரர்களுக்கும் பரிசு மழை பொழிந்தது.

இதில், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சின்ன கொம்பன், வெள்ளைக் கொம்பன், செவத்த கொம்பன் ஆகிய மூன்று காளைகள் விளையாடின. அமைச்சர் உதயகுமார், எம்.எல்.ஏ. மாணிக்கம், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரது காளைகளும் இதில் பங்கேற்றன.

இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் வளர்த்த காளை ஏசி வசதி கொண்ட கேரவனில் கொண்டு வரப்பட்டது. இந்தக் காளையானது வீரர் ஒருவரின் ஆடையை கொம்பில் குத்தி அவிழ்த்துச் சென்றது.

காளைகள் முட்டி 40 பேர் காயமுற்றனர். எட்டு சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டு மாலை நான்கரை மணி அளவில் முடிவுக்கு வந்தது.

15 காளைகளைப் பிடித்த அலங்காநல்லூரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டிலும் பரிசு வென்ற கார்த்திக், அஜய் ஆகியோர் இதிலும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர். சிறந்த காளையாக பரம்புப்பட்டி செல்லி அம்மன் கோவில் காளை தேர்வு செய்யப்பட்டது

click me!