100ஐ கடந்தது காற்று மாசின் அளவு… கலங்கும் தலைநகர் சென்னை!!

By Narendran SFirst Published Nov 5, 2021, 12:55 PM IST
Highlights

அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததன் எதிரொலியாக சென்னையில் காற்று மாசின் அளவு 100ஐ கடந்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் சிலர் சுவாசப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் நேற்று வெடிக்க நேரம் கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் பட்டாசு வெடித்ததால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்று மாசு பல மடங்கு அதிகரித்துள்ளது. முன்னதாக பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் நேரக் கட்டுப்பாடு விதித்தது. காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய, பேரியம் என்ற ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசு கள் மற்றும் சரவெடிகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை விதிக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நேரக் கட்டுப்பாட்டையும் விதிமுறைகளையும் யாரும் பின்பற்றவில்லை. இதன் விளைவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் பட்டாசு புகை சூழ்ந்ததால் காற்று மாசு அதிகரித்தது. காற்றில் கலந்திருக்கும் நுன் துகள்களின் எண்ணிக்கை அடிப்படையில் காற்றின் தரக்குறியீடு கணக்கிடப்படுகிறது. அதன்படி 00 - 50 வரை இருப்பின் அது ஆரோக்கியமானது என்றும் 51 - 100 வரை இருப்பின் மிதமான காற்று சுவாசிக்க ஏதுவானது என்றும் கூறப்படுகிறது. 101 - 150  உடல்நலக்குறை ஏற்படுபவர்கள், சுவாசப்பிரச்சனை உள்ளவர்கள் சுவாசிக்க உகந்த காற்று அல்ல என்றும் 151 - 200 ஆரோக்கியமான காற்று அல்ல என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் காற்று மாசின் அளவு 100ஐ கடந்தது. குடியிருப்பு பகுதிகளில் சிலர் சுவாசப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரசு சாலை எங்கும் புகை மண்டலமாக காட்சியளித்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தமிழகத்தில் காற்று மாசுபாட்டின் அளவு மிக அதிகபட்சமாக திருச்சியில் 321 குறியீடு என்ற அளவில் தற்போது வரை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்ததாக வேலூரில் 318, சேலத்தில் 275, திருப்பூரில் 233 என்கிற அளவிலும் தற்போது வரை காற்று மாசு பதிவாகியுள்ளது. மேலும் தூத்துக்குடியில் 45 என்ற மிகக் குறைந்த அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளது. இதேபோல் மணலியில் 344, நுங்கம்பாக்கத்தில் 272, பொத்தேரியில் 151, அம்பத்தூரில் 150, சேலத்தில் 275, திருப்பூரில் 233, மதுரையில் 188, கோவையில் 178 என்கிற அளவில் தற்போது வரை காற்று மாசு பதிவாகியுள்ளது. இதனிடையே டெல்லியில் அக்டோபர் மாதத்திற்கு பின் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். அதன்காரணமாக தீபாவளி அன்று வெடிவெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. பல்வேறு இடங்களில் டெல்லியில் வெடிகளை விற்றவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இருப்பினும் தடையை மீறி டெல்லியில் பல இடங்களில் வெடிகள் வெடிக்கப்பட்டது. இதன் காரணமாக டெல்லியில் காற்றின் மாசு அளவு நேற்று 380 புள்ளிகளை தொட்டது. இது மோசமான அளவு ஆகும். அதாவது இந்த நிலையை எட்டினால் சுவாசிப்பதில் பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இன்று அதிகாலை பனிப்பொழிவு, புகை மண்டலம், ஈரப்பதம் காரணமாக காற்று மாசு மேலும் அதிகரித்தது.

click me!