திருமண சீதனமாக 5 லிட்டர் பெட்ரோல் பரிசு..! மண்டபத்தில் விபரீத விளையாட்டு..!

By thenmozhi gFirst Published Sep 16, 2018, 4:12 PM IST
Highlights

பெட்ரோல் - டீசல் விலையேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக  வழங்கப்பட்ட நிகழ்வு கடலூரில் நடந்துள்ளது.

பெட்ரோல் - டீசல் விலையேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்ட நிகழ்வு கடலூரில் நடந்துள்ளது.

பெட்ரோல் - டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றத்தாலும், பால், முட்டை, காய்கறிகள், பழங்களும் விலை உயர்ந்து வருவதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன. 

பெட்ரோல் - டீசல் உயர்வுக்கு அரசியல் கட்சிகள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகிறது.விண்ணை முட்டும் விலையில் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், மணமக்களுக்கு மொய் பணமாக 5 லிட்டர் பெட்ரோல் கொடுக்கப்பட்ட நிகழ்வு கடலூரில் நடந்துள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள குமாரச்சி கிராமத்தில் இளஞ்செழியன் - கனிமொழி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தையொட்டி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமக்களின் உற்றார் உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வரவேற்பு விழாவுக்கு வந்தவர்கள், புதுமண தம்பதியருக்கு கிப்ட் கொடுத்தும், வாழ்த்துகள் கூறியும் வந்தனர். இந்த நிலையில், பிரபு - தீபா தம்பதி, புதுமண தம்பதியருக்கு வித்தியாசமான பரிசு ஒன்றை அளித்தனர். அவர்கள், 5 லிட்டர் பெட்ரோலை மணமக்களுக்கு 
அளித்தனர்.

இதனைப் பார்த்தவர்கள், உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பெட்ரோல் - டீசல் விலையேற்றம் குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் இந்த நூதன பரிசு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், நூற்றுக்கணக்கானோர் கூடும் வரவேற்பு நிகழ்ச்சியில், பெட்ரோலால் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சமும் இருந்ததாக விழாவுக்கு வந்திருந்தவர்களில் சிலர் கூறிச் சென்றனர்.

click me!