கல்குவாரி விபத்தில் மீட்கப்பட்ட நபர் உயிரிழப்பு... மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நேர்ந்த சோகம்!!

By Narendran SFirst Published May 15, 2022, 7:47 PM IST
Highlights

நெல்லை அருகே கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து ஏற்பட்ட விபத்தில் மீட்கப்பட்ட 3 ஆவது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை அருகே கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து ஏற்பட்ட விபத்தில் மீட்கப்பட்ட 3 ஆவது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம், தருவை கிராமம், அடைமிதிப்பான்குளம் என்ற இடத்தில் கல் குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு கல்குவாரியில் உடைத்து வைத்திருந்த கற்களை லாரிகள் மூலம் எம் சாண்ட் தயாரிக்கும் பகுதிக்கு எடுத்துச்செல்லும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது கல் குவாரியில் இருந்த பாறை திடீரென சரிந்து விழுந்தது. இதில் 300 அடி ஆழ பள்ளத்தில் முருகன், விஜய், செல்வம், முருகன், ராஜேந்திரன், செல்வகுமார் ஆகிய ஆறு பேர் சிக்கினர்.

மேலும், 3 ஜேசிபி இயந்திரம் மற்றும் இரண்டு லாரிகள் சிக்கியுள்ளது. இதுக்குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர், ராட்சத இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இதில் முன்னதாக முருகன் மற்றும் விஜய் ஆகிய இருவர் மீட்கப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த விபத்தில் சிக்கியுள்ள செல்வம், முருகன், செல்வகுமார் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

அப்போது தொடர்ந்து அந்த பகுதியில் 3 முறை பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில், 17 மணி நேர தீவிர போராட்டத்திற்கு பிறகு 3 ஆவது நபர் செல்வம் மீட்கப்பட்டார். ஆனால் செல்வம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எஞ்சிய 3 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே நெல்லை கல்குவாரியில் பாறை உருண்டு ஏற்பட்ட விபத்தில் சிக்கி காயமுற்றவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 1 இலட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவி வழங்கிட ஆணையிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

click me!