பெற்றோரை இழந்த 19 வயது இளம் பெண்ணுக்கு அரசுப் பணி… நெகிழ வைத்த திருவண்ணாமலை கலெக்டர்!!

By Selvanayagam PFirst Published Sep 27, 2018, 9:58 AM IST
Highlights

பெற்றோரை இழந்து வறுமையில் வாடிய 19 வயது இளம் பெண் ஒருவருக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சிறப்பு அனுமதி பெற்று சத்துணவு அமைப்பாளர் பணிக்கான உத்தரவை அவரது வீட்டுக்கு நேரில் சென்று வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்த வனிதா. என்பவர் சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் , கடந்த 2014-ம் ஆண்டு இறந்து விட்டார். இவரது கணவர் வெங்கடேசன் கடந்த ஓராண்டிற்கு முன்பு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு இறந்து விட்டார். இவர்களது மகள்கள் ஆனந்தி , அபி மற்றும் மகன் மோகன் ஆகியோர் பாட்டி ராணியின் பராமரிப்பில் இருந்து வந்தனர். தற்போது அந்தப் பாட்டியும் மரணமடைந்தார்.



இந்நிலையில்  ஆனந்தி கடந்த மாதம் 13-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து  தனது தாயாரின் பணியை தனக்கு வழங்க வேண்டும் என மனு கொடுத்தார். பிளஸ்-2 முடித்த ஆனந்தி தற்போது கல்லூரி ஒன்றில் பி.ஏ.படித்து வருகிறார்.

ஆனால் 19 வயதான ஒருவருக்கு அரசு வேலை வழங்க சட்டத்தில் இடமில்லை என்றும், ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் கனிகிலுப்பை கிராமத்திற்கு வந்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆனந்தியின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவர்களின் படிப்பு குறித்து விசாரித்து தைரியப்படுத்தினார். அத்துடன் ஆனந்தியின் வீட்டிலேயே மதிய உணவு சாப்பிட்ட  கலெக்டர், ஆனந்தியிடம் உங்களுடைய கஷ்டங்களை அரசுக்கு தெரிவித்து இதே ஊரில் சத்துணவு அமைப்பாளராக பணிசெய்ய உத்தரவினை வழங்க வந்துள்ளேன் என தெரிவித்தார். இதைனக் கேட்டு ஆனந்தி உள்ளிட்ட குடும்பத்தினர் கண் கலங்கி அழுதனர்.  தொடர்ந்து பணி உத்தரவினை ஆனந்தியிடம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கி அதற்கான நகல்களில் அவரே கையெழுத்துப் பெற்றார்.

ஆனந்தியை  தொலைதூர கல்வி மையம் மூலம் பி.ஏ., தமிழ் படிக்கவும், இவரது சகோதரி அபி, இரும்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் தொடர்ந்து இலவசமாக படிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனந்தியின் தம்பி மோகன் எஸ்.வி.நகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடைய கல்வி தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கலெக்டரை அனைவரும்  பாராட்டினர்.

click me!