திருவள்ளூர் ஏரிக்கரையோரப் பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்து வந்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் உடன் தங்கியிருந்த நேபாள் இளைஞர் தப்பியோட்டம்.
திருவள்ளூர் பேருந்து நிலையம் எதிரில் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த அஜீஸ்அகமது என்பவர் அல்நூர் என்ற பிரியாணி கடையை நடத்தி வருகிறார். இவரது கடையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மோபியாரா என்பவரது மகன் ராஜா (வயது 20) கடந்த 6 மாதத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்து வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த ரோஹித் ஷர்மா என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்பொழுது தான் கொண்டு வந்த உடமைகள், ஆவணங்கள் எல்லாம் தொலைந்து போனதாக கூறியுள்ளார். இதனையடுத்து கடை உரிமையாளர் அஜீஸ் அகமது, ரோஹித் ஷர்மாவை வேலைக்கு சேர்த்துள்ளார்.
இந்நிலையில் வேலை செய்பவர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்காக திருவள்ளூர் ஏரிக்கரையோரம் சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் தங்க வைத்துள்ளார். அதே போல் உரிமையாளர் அஜீஸ்அஹமது தங்குவதற்கும் சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வேலை அதிகமாக இருக்கும் போது இரவு நேரத்தில் அங்கு தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பீகார் மாநில இளைஞர் உடல் நிலை சரியில்லாததால் உரிமையாளர் தங்கும் வீட்டில் படுத்துக் கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதே போல் ரோஹித்ஷர்மாவும் அங்கு சென்று படுத்துக் கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணி வரை ராஜா மற்றும் ரோஹீத்ஷர்மா ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இன்று காலை ராஜாவும், ரோஹித்ஷர்மாவும் வேலைக்கு வராததால் உடன் வேலை செய்பவர்கள் உரிமையாளர் தங்கும் வீட்டிற்கு செற்று பார்த்த போது கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது ராஜா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தெரியவந்தது.
இது குறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராஜாவின் பளு தூக்கும் கருவியால் தலையில் தாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. கொலைச் சம்பவம் நடந்த பகுதிக்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதனையடுத்து ராஜாவின் பிரேதத்தைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகினறனர். இச்சம்பவம் திருவள்ளூர் ஏரிக்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.