குப்பையில் கிடந்த தங்க காப்பு: உரியவரிடம் கொடுத்த சேலம் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு!

By Manikanda Prabu  |  First Published Mar 10, 2024, 12:09 PM IST

குப்பையில் கிடந்த தங்கக் காப்பை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன


சேலம்  மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் டன் கணக்கிலான குப்பைகள் தினந்தோறும் சேகரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில், சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் உள்ள திரையரங்கு வளாகத்தில் நேற்று குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.

குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு குப்பை சேகரிக்கும் இடத்திற்கு ஊழியர்கள் வாகனத்தில் கொண்டு சென்றனர். அப்போது சூரமங்கலம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேஸ்திரி குமரேசனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒருவர், சேலம் உழவர் சந்தை அருகில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க வந்தபோது தனது குழந்தையின் கையில் இருந்து தங்க காப்பு கீழே விழுந்து விட்டதாகவும், தியேட்டரில் எங்கும் தேடி பார்த்து கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Videos

எங்கு தேடியும் அந்த தங்கக்காப்பு கிடைக்கவில்லை என்பதால், கு குப்பை சேகரிக்கும் போது கிடைத்ததா அல்லது இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட குப்பையில் உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து குப்பை எடுத்து செல்லப்பட்ட வண்டியை ஓரங்கட்டிய மாநகராட்சி  தூய்மை பணியாளர்கள் உடனடியாக வண்டியில் இருந்த குப்பைகளை தரம் பிரிக்க தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரமாக அலசி ஆராய்ந்தபோது குப்பையில் கிடந்த தங்க காப்பை மாநகராட்சி தூய்மை பணியாளர் மணிவேல்  கண்டு பிடித்தார். 

வள்ளி கும்மி நடனம்: அண்ணாமலை பாராட்டு!

இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களிடம் காணாமல் போன தங்க காப்பு கிடைத்து விட்டதாக தகவல்  தரப்பட்டது. இதையடுத்து, தியேட்டரில் இருந்த அவர்களிடம் தங்க  காப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மகிழ்ச்சியுடன் அதனை பெற்றுச் சென்றனர்.  தங்க காப்பை கண்டு பிடித்துக் கொடுத்த தூய்மை பணியாளர்களுக்கு தங்களது நன்றியையும் அவர்கள் தெரிவித்துக் கொண்டனர் 

தியேட்டரில் தவற விட்ட தங்க  காப்பை குப்பையில் இருந்து மீட்டெடுத்து உரியவர்களிடம் ஒப்படைத்த மாநாகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

click me!