ஆத்தூர் அருகே சோதனையின் போது நிற்காமல் சென்ற காரை மடக்கி பிடித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், ரூ.50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாகன தணிக்கையை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சுழற்சி முறையில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்த முற்பட்டபோது கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வீரகனூர் பகுதியில் இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சென்னையில் மீண்டும் பிரதமர் மோடியின் பிரமாண்ட ரோட் ஷோ; அண்ணாமலை அறிவிப்பு
அதன் அடிப்படையில் வீரகனூர் பகுதியில் அந்த காரை நிறுத்த முற்பட்டபோது அங்கும் கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த காரை விரட்டிச் சென்றனர். அதிகாரிகள் பின் தொடர்ந்து வருவதை அறிந்த காரில் இருந்த நபர்கள் வீரகனூர் பெரம்பலூர் சாலையில் வடிவுச்சி அம்மன் கோவில் எதிரில் சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.
தொடர்ந்து அதிகாரிகள் காரை சோதனையிட்ட போது வாகனம் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா என 50 மூட்டைகள் இருப்பதை கண்டறிந்தனர். 50 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை காருடன் பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசன் அறிவுறுத்தலின் பேரில் வீரகனூர் காவல் நிலையத்தில் கார் மற்றும் குட்கா மூட்டைகளை ஒப்படைத்தனர். இது குறித்து வீரகனூர் போலீசார் தப்பி ஓடிய நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.