சேலத்தில் காவல் வாகனம் மோதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்ட காவல்துறைக்கு சொந்தமான வாகனம் ஆயுதப்படை போலீசாரை அழைத்துக் கொண்டு சென்றது. குமாரசாமி பட்டி ஆயுதப்படை மைதானத்திற்கு சென்று கொண்டிருந்த காவல் வாகனம் கோட்டை மைதானம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாலிபர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சாலையோரம் அமர்ந்திருந்த அந்த வாலிபர் திடீரென காவல் துறை வாகனத்தின் குறுக்கே சென்றுள்ளார். அதனால் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயமடைந்த வாலிபர் சுறுண்டு விழுந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த வாலிபர் சாலையோரங்களில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து சேலம் டவுன் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.