நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வலி நிவாரண மாத்திரையை நீரில் கரைத்து போதை ஊசியாக பயன்படுத்திய 15 கட்டிட கூலிதொழிளார்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து 10 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே உள்ள சாமுண்டூர் மயான முட்புதர்களில் போதை மாத்திரைகளும், ஒரு முறை பயன்படுத்தும் ஊசிகளும் இருப்பதாக வெப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறையினரின் விசாரணையில், இளைஞர்கள் சிலர் இரவு நேரங்களில் ஒன்று சேர்ந்து தங்களுக்கு போதை வருவதற்காக மாத்திரையை நீரில் கரைத்து ஊசியாக தங்கள் நரம்புகளில் செலுத்திக் கொள்வது தெரிய வந்தது. இதுகுறித்து வெப்படை காவல் துறையினர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக இது தொடர்பாக 10 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளிபாளையம் மற்றும் வெப்படை பகுதியில் உள்ள சில இளைஞர்கள் கட்டிட வேலைக்கு செல்வோர், ஆன்லைன் மூலம் பெறப்படும் வலி நிவாரண மாத்திரையை நீரில் கரைத்து தங்கள் கைகளில் ஊசி மூலம் செலுத்தி போதை உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில், பள்ளிபாளையம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15 இளைஞர்களை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
உலகின் 7 அதிசயத்தை கோழி முட்டையில் கொண்டு வந்த அரசுப்பள்ளி மாணவி
விசாரணையில் அவர்கள் வலி நிவாரண மாத்திரையை போதைக்காக தங்கள் நரம்புகளில் செலுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்கான மருந்துகளை ஆன்லைனில் பெற்று ஒருவருக்கொருவர் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 10 ஆயிரம் வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் மதிப்பு சுமார் 30 லட்சம் என கூறப்படுகிறது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட 15 பேரும் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். வெப்படை மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் போதைக்கு அடிமையான கட்டிட கூலி தொழிலாளர்கள் வலி நிவாரண மாத்திரையை போதை ஊசியாக பயன்படுத்தியது தனியார் மருந்து கடைகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.