மயிலாடுதுறை மாவட்டத்தில் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற இளைய மகன் மறுப்பு தெரிவித்த நிலையில், காவல் துறையினர் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த பேச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில் முதல் மகன் ரகுராமன் வெளிநாட்டில் தொழில் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கடைசி மகனாக சீதாராமன் தனது சகோதரர் ரகுராமனுடன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், ரகுராமன் வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பிய பணத்தைக் கொண்டு அவரது தந்தை கணேசன் பேச்சாவடி பகுதியில் வணிக வளாகத்துடன் கூடிய திருமண மண்டபத்தை கட்டியதாகக் கூறப்படுகிறது.
சகோதரர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், வயது முதிர்ந்த நிலையில் கணேசன் இந்த திருமண மண்டபத்தை தனது மனைவி பானுமதி பெயரில் உயில் எழுதித் தந்துள்ளார். ஆனால், அதற்கு உடன்படாமல் திருமண மண்டபத்தை 7 ஆண்டுகளாக ஆக்கிரமித்துக்கொண்ட இளையமகன் சீதாராமன், கூட்டுக்குடும்பத்தில் இருந்து பிரிந்து, இருதரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
கல்லூரி இளைஞர்கள் தான் டார்கெட்; கென்யா போதை பொருள் கடத்தல் கும்பலை பொறி வைத்து பிடித்த கோவை போலீஸ்
இந்நிலையில் கணேசன் வயது முதிர்வால் நேற்று உயிரிழந்தார். அவர் உயிரிழப்பதற்கு முன்பு தனது உடலை தான் கட்டிய திருமண மண்டபத்தில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை தந்தையின் இறுதி காரியத்துக்காக வந்த சீதாராமனிடம் கூறியபோது அவரும் ஏற்றுக்கொண்டு இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளார்.
பின்னர், வீட்டில் இருந்து கணேசனின் உடலை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மண்டபம் முன்பு வந்தபோது, சீதாராமன் மண்டபத்தை பூட்டி வைத்துக்கொண்டு, பிரேதத்தை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து, கணேசனின் உடலை அவரது மூத்த மகன் ரகுராமன் உள்ளிட்டவர்கள் எடுத்து மண்டபத்தின் வாசலிலேயே வைத்து விட்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக சீதாராமனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், சீதாராமன் ஏற்றுக்கொண்டதை அடுத்து, கணேசனின் உடல் திருமண மண்டபத்தின் வளாகத்தில் அரை மணி நேரம் வைக்கப்பட்டு அதன்பின்னர் தகனத்துக்காக கொண்டு செல்லப்பட்டது. திருமண மண்டபத்தின் வாசலில் பிரேதம் வைக்கப்பட்ட சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.