நாகப்பட்டினம் அருகே தனியார் கல்லூரி பேருந்தின் ஓட்டுநர் தூக்கத்தில் பேருந்தை இயக்கிய நிலையில் பேருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த வடக்கு பொய்கைநல்லூரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரும் அவரது அண்ணன் மகன் முருகானந்தம் என்பவரும் இருசக்கர வாகனத்தில் வடக்கு பொய்கைநல்லூரில் இருந்து நாகப்பட்டினம் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் வேளாங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பரவை பால்குளத்து வீரன் கோவில் அருகே வந்தபோது வேதாரண்யம் பஞ்சநதி குளத்தில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றுக் கொண்டு பாப்பாகோயில் நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்திற்கு நிலை தடுமாறி சென்றுள்ளார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த முருகானந்தத்தின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் முருகானந்தம் மற்றும் பின்னால் அமர்ந்திருந்த மாரியப்பன் இருவரும் வயலில் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முருகானந்தம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பதப்பதைக்கும் வீடியோ காட்சிகள் அருகில் இருந்த சொகுசு விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை வைத்து வேளாங்கண்ணி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1600 கோடி முதலீடு; 6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் ராஜா உறுதி