நாகை அரசு மருத்துவமனை வட்டார மருத்துவமனையாக தொடர்ந்து செயல்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஒரத்தூரில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அதே வசதியுடன் இயங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நாகை அரசு மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட 24 மணி நேரமும் இயங்கக்கூடிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள், இருதய சிகிச்சை பிரிவுகள், தீவிர சிகிச்சை பிரிவுகள் ஆகியவற்றை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், நாகை அரசு பொது மருத்துவமனையில் விபத்து பிரிவு 15 படுக்கைகள் வசதிகளுடன் உயர் சிகிச்சை பிரிவு, பொது வார்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.
ஒரத்தூர் கிராமத்தில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில் ஆயிரம் புற நோயாளிகள் பயன்பெறும் வகையில் இயங்கி வருகிறது. நாகை அரசு மருத்துவமனையை மூடக்கூடாது என்று பலர் கோரிக்கை வைக்கின்றனர். நாகையில் 4 பேர் குழப்பம் விளைவித்து வதந்தி கிளப்பி நாகை மருத்துவமனை மூடப்படுவது போல போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகையில் 150 மகப்பேறு மருத்துவம் நடைபெறுகிறது. நாகை மருத்துவமனை மூடப்பட்டதுபோல சித்தரித்து போராட்டம் நடைபெற்றது வருத்தம் அளிக்கிறது. நாகை மருத்துவமனை புதிய கட்டமைப்பு செய்யப்பட்டு வசதிகள் மேம்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகை மற்றும் நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் போதிய குடிநீர் ஆதாரங்களை சோதனை செய்யாமல் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. தமிழக அரசு பொறுப்பேற்ற உடன் கூடுதல் நிதி செலவு செய்து குடிநீர் ஆதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட நாகை மற்றும் நாமக்கல் மருத்துவக் கல்லூரி குறித்த பல புகார்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
பக்கவாதத்தால் முடங்கிய குடும்ப தலைவர்; வாடகை வீட்டு உரிமையாளரின் செயலால் குடியிருப்புவாசிகள் அச்சம்
நாகை அரசு மருத்துவமனை வட்டார மருத்துவமனையாக செயல்படும். சர்க்கரை நோயாளிகள், இரத்தகொதிப்பு நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மாத மாத்திரை, மருந்துகள் தொடர்ச்சியாக வழங்கப்படும். சிடி ஸ்கேன், இரத்த பரிசோதனை நிலையங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்தார். மேலும் 20 மருத்துவ மாவட்டங்களில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களுக்கு 1021 பேர் பணி ஆணை பெற்றுள்ளனர். இவர்களில் 193 பேர் பணிக்கு வராததால் அவர்களின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டு புதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.