கன்னியாகுமரி மாவட்டம் தமிழக, கேரள எல்லை பகுதியில் உள்ள நியாயவிலைக்கடை ஒன்றில் எடை குறைவாக அரிசி வழங்குவதை நிரூபிக்க பயனாளி ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்களின் அளவு துள்ளியமாக இருக்கவேண்டும் என்பதற்காக அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் டிஜிட்டல் தராசு மூலம் பொருட்களை விநியோகம் செய்கிறது. மேலும் அரசு சார்பில் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் தேவையான அளவுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. ஆனால், ஒருசில கடைகளில் பொருள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அப்படி தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் அதற்கு கடை ஊழியர்கள் தான் பொறுப்பு என்று ஏற்கனவே அரசு தெரிவித்துள்ளது.
பொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்காக பொதுமக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எடையைக் காட்டிலும் குறைவான அளவிலேயே பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. தமிழகத்தின் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இது வாடிக்கையான ஒன்று தான்.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக, கேரள எல்லையில் உள்ள நியாய விலைக்கடை ஒன்றில் பயனாளி ஒருவர் அரசி வாங்க சென்றபோது அரிசியின் எடை குறைவாக இருந்ததை கண்டு சந்தேகமடைந்துள்ளார். இது தொடர்பாக கடையில் இருந்த பெண் ஊழியரிடம் இது எத்தனை கிலோ உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு உள்ளே இருக்கும் பெண் ஊழியர் 20 கிலோ என பதில் கூற, சற்றும் தாமதிக்காமல் அதே சாக்கு மூடையை உள்ளே அவர்கள் எடை போட்டு வழங்கிய எடை மெஷினில் தூக்கி வைத்து எடைபோட்டு பார்த்தனர்.
தரமற்ற சாலை; கேள்வி கேட்ட பொதுமக்களுக்கு தர்ம அடி கொடுத்த திமுக கவுன்சிலர்
அப்போது அதில் 17 கிலோ அரிசி தான் இருந்தது. இதனையடுத்து அதே பயனாளி காலி சாக்குப்பையின் எடை போக இதில் எத்தனை கிலோ இருக்கும் என சரமாரியாக கேள்வி எழுப்பினார். கேள்விகளுக்கு அந்த பெண் ஊழியர் பதில் ஏதும் பேசாமல் தலை குனிந்தபடி அமர்ந்திருக்க அந்த பயனாளி கடையில் மக்கள் பார்வைக்கு எடை இயந்திரம் வைக்கப்படவில்லை எனவும், அவர்கள் பார்வைக்கு மட்டும் வைத்து மக்களை ஏமாற்றி அரிசியின் எடையை குறைத்து வழங்கி மீதம் வரும் அரிசிகளை கடத்தல் தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு வழங்கி அதிக லாபம் ஈட்டி வருவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.