கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சலுகை விலையில் செல்போன் வாங்குவதற்காக கொடுத்த ஆதார், பான் மற்றும் ஏடிஎம் கார்டு சான்றுகளை வைத்து ரூபாய் 80 லட்சம் வரை மோசடி செய்ததாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புதூர், எட்டா மடை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் பகுதியைச் சேர்ந்த அருள் பிகாத் என்பவர் நாகர்கோவில் ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அவரிடம் சலுகை விலையில் செல்போன் வாங்குவதற்காக நாங்கள் சென்றோம். இதற்காக எங்கள் பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தங்களது ஆதார் மற்றும் முகவரி சான்றுகளை கொடுத்தனர். இந்த நிலையில் பலருக்கும் தற்போது தனியார் வங்கியில் இருந்து லோன் பெற்றதாக தகவல் வந்திருக்கிறது.
undefined
இது தொடர்பாக விசாரித்த போது அருள் பிகாத் எங்களது ஆதார், பான் மற்றும் ஏடிஎம் கார்டு போன்றவைகளை பயன்படுத்தி தவணை முறையில் ஏராளமான பொருட்களை வாங்கியுள்ளார். மேலும் வாங்கிய பொருட்களுக்கு தவணைத் தொகையை முறையாக கட்டவில்லை என்பதும் சுமார் ரூ.80 லட்சம் வரை மோசடி செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பலரும் தற்போது அச்சத்தில் இந்த கடன்களை கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அந்த நபரின் வீட்டிற்கு சென்று கேட்டால் அவர்கள் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். பாதிக்கப்பட்ட அனைவரும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களாக உள்ளோம். எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே மோசடி செய்ததாக கூறப்படும் அருள்பிகாத் தற்போது வெளிநாடு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவரது வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டால் தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறுவதாக இளைஞர்கள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர்.