காஞ்சிபுரம் அருகே இருவேறு இடங்களில் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பினைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகம் முழுவதும் அமலில் உள்ளன. இதனால் மாலை 6 மணிக்கு மேல் ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணத்தை எடுத்துச் செல்லும் வாகனங்களும், பிற பரிசுப் பொருட்களை எடுத்துச் சொல்லும் வாகனங்களுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஜி ஆர் டி நகைக்கடையில் இருந்து அரக்கோணம், செங்கல்பட்டு, ஓஎம்ஆர் பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு தங்க நகைகளை ஏற்றிச் சென்ற தனியார் வாகனத்தை காஞ்சிபுரம் அருகே வையாவூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
வாகன சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி நகைகள் கொண்டு செல்லப்படுவதை கண்டறிந்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து உரிய ஆவணங்கள் உள்ளதா என மாவட்ட வருவாய் துறை அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல வாலாஜாபாத் பகுதியிலும் டாடா, ஜிஆர்டி உள்ளிட்ட பல்வேறு நகைக் கடை நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொண்டு சென்ற வாகனத்தையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழிசை ராஜினாமா ஏற்பு.! சிபி ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கிய குடியரசு தலைவர்
மேலும் வையாவூரில் பறிமுதல் செய்த வாகனத்தில் 10 கிலோ தங்க நகைகளும், 58 கிலோ வெள்ளி நகைகளும், வாலாஜாபாத்தில் பறிமுதல் செய்த வாகனத்தில் 8 கிலோ தங்க நகைகளும் 42 கிலோ வெள்ளி நகைகளும் என 18 கிலோ தங்க நகைகளும் 100 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து, உரிய ஆவணங்களை காட்டி பெற்றுச்செல்லும் வரை கருவூலத்தில் ஒப்படைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இரு வேறு இடங்களில் தங்க நகைகளை கொண்டு சென்ற வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருவதால் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.