கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் தங்கள் நிலத்தில் உள்ள புதையல், தங்கத்தை குறைந்த விலைக்கு விற்பதாகக் கூறி தம்பதியரை ஏமாற்ற முயன்ற பெண் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி ரஞ்சனி. இவர்கள் அதே பகுதியில் குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்கள். கர்நாடகா மாநிலம் மைசூருவைச் சேர்ந்தவர்கள் பீம், குடியா அண்ணன் தங்கையான இவர்கள் இருவரும் கோவையில் நடைபாதைகளில் வசித்து துணி வியாபாரம் செய்து வந்தனர்.
இவர்கள் இரண்டு பேரும் சுதாகர், ரஞ்சனியிடம் கடைக்கு தினமும் பழ ஜூஸ் குடிக்க வருவது வழக்கம். இவர்கள் தங்கள் ஊரில் பூமிக்கு அடியில் புதையல் இருப்பதாகவும், அதனை குறைந்த விலைக்கு விற்பதாகவும் அவரிடம் கூறி உள்ளனர். மேலும் தங்களிடம் குறைந்த விலையில் தங்கம் உள்ளதாகவும் ரூபாய் 25 ஆயிரம் கொடுத்து வாங்கி கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.
குறைந்த விலைக்கு தங்கம் கிடைப்பதால் இதை உண்மை என்று நம்பிய சுதாகர், ரஞ்சனி ஆகியோர் ரூபாய் 25 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு சுதாகர், ரஞ்சனியை ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகே வருமாறு பீம், குடியா தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சுதாகர், ரஞ்சனி தம்பதியினர் பணத்துடன் அங்கு வந்தனர். அப்பொழுது அங்கே பீம், குடியா வந்து அவர்களிடம் பணம் எங்கே என்று கேட்டனர்.
காலாவதியான மாத்திரையை சாப்பிட்ட மாணவி மயக்கம்; தாராபுரத்தில் பரபரப்பு
அதற்கு அவர்கள் ஒரு பையில் உள்ளது என்று கூறி பணப் பையை காட்டினார். இதை அடுத்து தங்கத்தை கொண்டு வருவதாக கூறி அவர்கள் திடீரென ரஞ்சனி கையில் வைத்து இருந்த பணப் பையை லாபகமாக பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சனி சத்தம் போட்டதால் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் இரண்டு பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து கடைவீதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பீம், குடியா மீது வழக்குப் பதிவு செய்தனர். இதைதொடர்ந்து அவர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.