பொள்ளாச்சி அருகே தனியார் துணி நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றும் நபர் தனக்கு தேவையான கஞ்சா செடிகளை வீட்டிலேயே வளர்த்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் டெய்லராக பணியாற்றி வரும் ஜே.ஜே. காலனியை சேர்ந்த ஈஸ்வரன் (52) என்பவர் வீட்டை ஆய்வு செய்தனர்.
ஜூன் 4 நாட்டின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும் - ஸ்டாலின் நம்பிக்கை
அப்போது வீட்டின் முன்பு கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த 13 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது கஞ்சா செடிகளை வளர்த்து தனது பயன்பாட்டுக்கும், மற்றவர்களுக்கு விற்பனை செய்ய முற்பட்டது தெரிய வந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழகம் முழுவதும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் காவல் துறையினர் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை ஆங்காங்கே மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்து வரும் நிலையில், பொள்ளாச்சி அருகே டெய்லர் தனது வீட்டிலேயே கஞ்சா செடியை வளர்த்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.