மேட்டுப்பாளையம் நகராட்சியில் தூய்மை பணி மேற்கொள்ள வில்லை என புகார் அளித்ததால் இளைஞர் மீது தாக்குதல் நடத்திய பெண் நகர மன்ற உறுப்பினரின் கணவரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டு பகுதியான ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். பட்டதாரியான இவர் அந்தப் பகுதியில் குடும்பத்துடன் வாழ்ந்து வரக்கூடிய நிலையில், ரயில்வே காலனி பகுதியில் கடந்த சில மாதங்களாக சரிவர தூய்மை பணி மேற்கொள்ளாமலும், கழிவு நீர் ஓடைகள் தூர்வாராமலும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் குப்பைகள் தேங்கியும், கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதாக கௌதம் புகார் தெரிவித்து அது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நகராட்சி 23வது வார்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் கவிதா மற்றும் அவரது கணவர் புருஷோத்தமன் ஆகிய இருவரும் ரயில்வே காலனியில் வசிக்கக்கூடிய கௌதம் வீட்டுக்கு சென்று அவரை அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் வாக்குவாதம் பெரிதாகி திடீரென புருஷோத்தமன் கௌதமை தாக்கியதாக உள்ளார். இதில் கௌதமுக்கு கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், தற்போது சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கௌதம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் நடைபெற்ற போது கவுன்சிலரின் கணவர் புருஷோத்தமன் கௌதமை தாக்கும் வீடியோ தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.