கோவையில் பிரபல தனியார் மருத்துவமனையில் திருட முயன்றதாக ஒருவர் அடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் மருத்துவமனையின் துணைத்தலைவர் உள்பட 8 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் மணி(எ) ராஜா. இவரது மனைவி சுகன்யா. இவருக்கு பள்ளி செல்கின்ற வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ராஜா கடந்த திங்கள் கிழமை அவினாசி சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அங்குள்ள கம்பிகளை திருட முயற்சித்தாகக் கூறப்படுகிறது.
இதனால் அங்கு பணியில் இருந்த மருத்துவமனை பாதுகாவலர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரை அடித்தாகக் கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த மணிக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே உயிரிழந்த ராஜாவின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், உயிரிழந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அது பொய்யான தகவல். ஊழியர்கள் அடித்ததால் மட்டுமே அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது.
முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை மாற்ற வேண்டும். மருத்துவமனையின் தலைவர் இங்கு வந்து எங்களிடம் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும். உயிரிழந்த நபரின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளன. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக விளக்கம் அளித்த காவல் துறையினர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனையின் துணைத்தலைவர் நாராயணன் உள்பட 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைப்படி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இருப்பினும் மருத்துவமனையில் ராஜா கடைசியாக உள்ளே நுழைந்த சிசிடிவி காட்சியை எங்களிடம் காண்பிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.