கோவை சின்னியம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை கம்பால் தாக்கிய தலைமை ஆசிரியரைக் கண்டித்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளி நேரத்தில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 6 பேர் உள்பட மாணவர்கள் சிலர் அங்குள்ள தெர்மாகோல் சீட்டுகளை எடுத்து விளையாடியதாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த தலைமை ஆசிரியை பலமுறை அவர்களை எச்சரித்தும் அவர்கள் அந்த செயலை மீண்டும் மீண்டும் செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அனைத்து மாணவர்களையும் தனது அறைக்கு அழைத்து விசாரணை செய்தார். பிறகு அவர்கள் குறும்பு செய்தது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் அனைவரையும் கம்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் மாலையில் வீடு சென்றதும் முறையிட்டுள்ளனர். இதையடுத்து இன்று காலை பள்ளி திறந்ததும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
undefined
மாணவர்களை அடித்த தலைமை ஆசிரியை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார கல்வி அலுவலர் தமிழ்செல்வி மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் பள்ளிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினா். பின்னர் தான் மாணவர்கள் மீதும் தவறு இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது.
இதனால் பெற்றோர் தரப்பில் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறினர். எனவே தலைமை ஆசிரியையிடம் இனி வரும்காலங்களில் இதுபோன்று தவறு நடக்காது என்று கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் எழுத்துப்பூர்வமாக கடிதம் பெற்றனர். இதையடுத்து பெற்றோர் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.