கோவை கரும்புக்கடை பகுதியில் இரண்டு விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை திருடி செல்லும் இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகர் கரும்புக்கடை பகுதி MCR வீதியில் வசித்து வருபவர் கல்லூரி மாணவரான சன்பர். இவர் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை வைத்துள்ளார். வழக்கம் போல் நேற்றுமுன் தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு அப்பகுதியில் சுற்றி திரிந்த ஐந்து இளைஞர்கள் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது பைக்கை திருடி சென்றுள்ளனர்.
தொடர்ந்து அவரது வீட்டின் எதிர் வீட்டில் வசித்து வரும் எலக்ட்ரிசியன் முகமது இஸ்மாயில் என்பவரது விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தையும் திருடி சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்று காலை இருவரும் வெளியில் வந்து பார்த்த போது அவர்களது வாகனங்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் வாகனங்களை தேடிய அவர்கள் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது ஐந்து இளைஞர்கள் அவர்களது பைக்கை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் கரும்புக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒகேனக்கல் காவிரி கரையோரம் இளம் காதல் ஜோடி விபரீத முடிவு; காதலன் பலி, பள்ளி மாணவி கவலைக்கிடம்
கோவை மாநகரில் அண்மை காலங்களாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரவு நேரங்களில் காவல் துறையினர் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.