ஒகேனக்கல் காவிரி கரையோரம் இளம் காதல் ஜோடி விபரீத முடிவு; காதலன் பலி, பள்ளி மாணவி கவலைக்கிடம்
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி ஒகேனக்கல் காவிரி கரையோரம் விஷம் அருந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், காதலன் பலி, காதலி கவலைக்கிடம்.
கர்நாடக மாநிலம் கனகபுரா மாவட்டம், சாமுண்டிபுரா பகுதியைச் சேர்ந்த நாகநாயக்கா என்பவரது மகள் ரக்ஷிதா பாய் (வயது 16). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி மாணவியும், அதே பகுதியைச் சேர்ந்த மாதேவ் மகன் உமேஷ் (24) என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதனிடையே இருவரும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வீட்டை விட்டு ஓடி வந்து தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வந்துள்ளனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரத்தில் அமர்ந்து இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர். நீண்ட நேரம் இருவரும் தனியாக அமர்ந்துள்ளதை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள், அவர்களிடம் விசாரிக்க முயன்ற போது இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.
தமிழ்நாட்டையே ஆட்சி செய்ய தகுதி இல்லாதவர் மு.க.ஸ்டாலின் - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
இதுகுறித்து ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரையும் மீட்டு அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உமேஷ் உயிரிழந்ததாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தீவிர சிகிச்சைக்காக ரக்ஷிதா பாய் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ஒகேனக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே கர்நாடக மாநிலம் கோடி அள்ளி காவல் நிலையத்தில் பள்ளி மாணவி காணவில்லை என பெற்றோர் புகார் அளித்துள்ளதால் தமிழக காவல் துறையினர் தகவல் அளித்த நிலையில் கர்நாடக போலீஸார் தமிழக பகுதிக்கு விரைந்துள்ளனர்.