கோவை நகர் பகுதிகளில் சுற்றித் திரியும் மக்னா காட்டு யானையை பிடிக்க மீண்டும் சின்னதம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை நேற்று கோவை மாநகர் பகுதிக்குள் நுழைந்ததால் அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர், கோவை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றிலிருந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது வரை யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் கோவை மாநகர் பகுதிக்குள் சுற்றி வருகிறது.
ஓசூரில் மெட்ரோ ரயில் திட்ட பணிக்கு மத்திய அரசு அனுமதி - எம்பி செல்லகுமார் தகவல்
தற்போது பேரூர் பகுதியில் உள்ள SMS தனியார் கல்லூரி பின்புறம் இருக்கும் தோட்டத்தில் மக்னா யானை சுற்றி வருகிறது. இந்த நிலையில் அதனை பிடிப்பதற்கு டாப்சிலிப் யானைகள் முகாமிலிருந்து சின்னத்தம்பி கும்கி யானை அழைத்து வரப்பட்டுள்ளது. சின்னத்தம்பி யானையை கொண்டு மக்னா யானையை பிடிக்கும் பணியில் தற்பொழுது வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் வனத்துறையினரின் மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.
ஏற்கனவே தர்மபுரியில் சுற்றித்திரிந்த மக்னா யானையை சின்னதம்பி என்ற கும்கி யானையின் உதவியுடன் தான் வனத்துறையினர் பிடித்து அதனை டாப்சிலிப் பகுதியில் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.