மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி என்பதை ஒன்றிய அரசு அரசியலுக்காக தற்போது கையில் எடுத்துள்ளது, அது வெறும் கானல் நீராக தான் உள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர பகுதியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு இன்று மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் ஏ.வ.வேலு பேசுகையில், கடந்த முறை கோவை வந்திருந்த போது மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டது போல கல்வி நிறுவனங்கள் நிறைந்த கோயம்புத்தூரிலும் நூலகம் கட்ட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதனை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன். அதன் அடிப்படையில் 2024-25 நிதிநிலை அறிக்கையில் கோயம்புத்தூரில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதனை எங்கு அமைக்கலாம் என ஆய்வு செய்வதற்காக இன்று அதிகாரிகளோடு ஆய்வு செய்துள்ளோம். இரண்டு இடங்களை பார்வையிட்டுள்ளோம்.
மது போதையில் தமிழ் புலிகள் கட்சியினர் சாலையில் அலப்பறை; பொதுமக்களுக்கு இடையூறு செய்து அராஜகம்
ரேஸ்கோர்ஸ்ன் மையப்பகுதியில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பிலும், மத்திய சிறைச்சாலையை ஒட்டி ஏழு ஏக்கர் பரப்பளவிலும் உள்ள இரண்டு இடங்களை தேர்வு செய்துள்ளோம். முதல்வரின் ஆலோசனைப்படி இடம் தேர்வு செய்யப்பட்டு கலைஞர் நூலகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
மத்திய சிறைச்சாலை அமைந்துள்ள பகுதியினை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, இப்போது அங்கு செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கான பணிகளை முதல்வர் துவக்கி வைத்துள்ளார். பொதுப்பணி துறையின் மீது உள்ள நம்பிக்கை காரணமாக 2026 ஜனவரி மாதத்தில் இங்கு கலைஞர் நூற்றாண்டு விழா நூலகம் கட்டி முடிக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இது நூலகமாக மட்டுமல்லாமல் அறிவியல் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப மையமாகவும் இருக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் கல்லூரிகள் நிறைந்த கோவையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைப்பதற்கான பணிகளை வேகப்படுத்தியுள்ளோம்.
மேற்கு புறவழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் இரண்டாம் கட்ட திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டு இந்த நிதியாண்டில் பணிகள் துவங்கப்படும்' என தெரிவித்தார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் அறிவிக்கப்பட்டு நடைபெறாமல் உள்ளது. இதனை சுட்டிக்காட்டும் விதமாக இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செங்கலை எடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் சுட்டிக் காட்டினார். திமுக ஆட்சி அமைத்ததும் கிண்டியில் 240 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் இல்லாத சிறப்புகள் அனைத்தும் அங்கு உள்ளது. இதை 13 மாதங்களில் செய்துள்ளோம். 18 மாத ஒப்பந்த காலமாக இருந்தாலும் 13 மாதங்களில் பணிகளை முடித்து திறந்து வைத்துள்ளோம்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி என்பதை ஒன்றிய அரசு அரசியலுக்காக தற்போது கையில் எடுத்துள்ளது. அது வெறும் கானல் நீராக தான் உள்ளது' என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.