Maha Shivratri | PVR Inox திரையரங்குகளில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை!

By Dinesh TGFirst Published Mar 5, 2024, 5:41 PM IST
Highlights

திரையரங்க வரலாற்றில் முதல்முறையாக ஈஷா மஹாசிவராத்திரி விழா PVR Inox திரையங்குகளில் மார்ச் 8-ம் தேதி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
 

புதுச்சேரி, டெல்லி, மும்பை, புனே, பாட்னா, அகமதாபாத், இந்தோர், ஜெய்ப்பூர், கான்பூர், நொய்டா, லக்னோ, அலகாபாத், டேராடூன் உட்பட 35 பெருநகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட PVR Inox திரையரங்குகளில் மஹாசிவராத்திரி விழா நேரலை ஒளிபரப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணி முதல் அனுமதிக்கப்பட்ட காட்சி நேரம் வரை இவ்விழா ஒளிபரப்பு செய்யப்படும். இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படும்.

கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு முன்னிலையில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவில் குடியரசு துணைத் தலைவர் திரு. ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்தியாவின் தலைசிறந்த இசை கலைஞர்கள் சங்கர் மஹாதேவன், குருதாஸ் மான், தமிழ் நாட்டுப்புற பாடகர் திரு. மஹாலிங்கம், மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த ராப்பர்ஸ் இசை குழுவினர் மற்றும் ஆப்பிரிக்கா, லெபனான், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த இசை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இரவு முழுவதும் களைகட்ட உள்ளது.

இது தொடர்பாக PVR Inox நிறுவனத்தின் துணை தலைமை செயல் அதிகாரி திரு. கவுதம் தத்தா கூறுகையில், “மஹாசிவராத்திரி விழா என்பது பாரத பாரம்பரியத்தில் ஈடு இணையற்ற ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும். இத்தகைய சிறப்புமிக்க இவ்விழாவை ஈஷாவுடன் இணைந்து முதல்முறையாக வெள்ளி திரையில் ஒளிபரப்பு செய்யும் வாய்ப்பை ஒரு பாக்கியமாக கருதுகிறோம். பக்தர்கள் உங்களுக்கு அருகில் இருக்கும் PVR Inox திரையரங்குகளில் இவ்விழாவில் பங்கேற்று பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.

இவ்விழாவில் பங்கேற்பதற்கான டிக்கெட்களை pvr-mahashivaratri.co என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழ்நாட்டில் கோவை தவிர்த்து 36 இடங்களில் நேரலை ஒளிபரப்புடன் கூடிய நிகழ்ச்சியாக கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!