பத்ம ஸ்ரீ விருது பெற்ற கோவையை சேர்ந்த 108 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள் தேக்கம்பட்டியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதல்முறை வாக்காளர்கள் மட்டும் 10.92 லட்சம் பேர் ஆவர். தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.3 லட்சம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 68,321 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 8,050 பதற்றமான வாக்கு சாவடிகள் எனவும், 183 மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் 1.58 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், வேட்பாளர்கள், சாமானிய மக்கள் என அனைவரும் இந்த தேர்தலில் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற கோவையை சேர்ந்த 108 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள் தேக்கம்பட்டியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.
யார் இந்த பாப்பம்மாள் :
கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள். இவர் ரசாயன உரங்கள் இன்றி இயற்கை முறையிலேயே விவசாயம் செய்து வருகிறார். அவரின் இந்த சாதனையை பாராட்டி அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டது. 108 வயதிலும் வயிலில் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார் பாப்பம்மாள்.
வேளாண் துறையில் முன்னோடியாக இருக்கும் பாப்பம்மாள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த தள்ளாத வயதிலும் 2.5 ஏக்கர் நிலத்தில் ஒவ்வொரு நாளும் வேலை செய்து வருகிறார்.
கடந்த 2021-ம் ஆண்டு பிரதமர் மோடி கோவை வந்திருந்த போது, அவர் பாப்பம்மாள் காலில் விழுந்து வணங்கினார். 1959-ம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சியின் வார்டு உறுப்பினராக தேர்வு செயப்பட்ட பாப்பம்மாள், பஞ்சாயத்து ஒன்றியத்தில் கவுன்சிலராகவும் தேர்வு செய்யப்பட்டார். திமுக உறுப்பினரான இவர் கருணாநிதியின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.