தேர்தல் விதிமுறைகளை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, நெடுஞ்சாலையின் நடுவே உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளானாதாக கூறி, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா கடற்பகுதியில் உள்நாட்டு க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி!
இதுகுறித்து பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தேர்தல் ஆணையத்திடம் வழக்குப்பதிவு செய்யக்கோரி சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர்.
அதில், உதயநிதி ஸ்டாலின் நெடுஞ்சாலையின் நடுவே பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலைகளின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளில் திமுகவினர் கட்சி கொடிகளை கட்டினர். நூற்றுக்கணக்கான வாகனங்களில் பொதுமக்களை அழைத்து வந்து சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை நிறுத்தி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. புகாரை பெற்றுக் கொண்ட தேர்தல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.