இந்தியாவிலேயே முதன் முறையாக கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில், நாய், பூனைகளுக்கான மின்மயானத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 75வது வார்டு பகுதியான சீர்நாயக்கன்பாளையம் பகுதியில், மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ஆகியவற்றின் சார்பில் இந்தியாவிலேயே முதன்முறையாக செல்ல பிராணிகளுக்கான மின் மயானம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். முன்னதாக மின் மயான கல்வெட்டை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் தகன மேடைகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ரோட்டரி க்ளப் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாய் மற்றும் பூனைகளுக்கான மின் மயானம், தனியார் அமைப்பு மூலம் சுமார் 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதாகவும், தங்களது வீட்டில் வளர்க்கும் நாய், பூனைகளை இங்கு தகனம் செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும் சாலைகளில் உயிரிழக்கும், தெரு நாய்களை இலவசமாக தகனம் செய்து கொள்ளவும் ஒரு நாளைக்கு ஆறு நாய்கள் எரியூடப்படும் வகையிலும் உருவாக்க பட்டுள்ள இந்த மின் மயானம் தற்போது முழுக்க முழுக்க எல்பிஜி கேஸ் மூலமாக இறந்த விலங்குகளின் முழு கழிவுகளும் முற்றிலும் எரிக்கப்பட்டு அதன் மாசு வெளியே போகாமலும் பொதுமக்களுக்கு எந்தவித சுகாதார முறைகேடுகளும் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை எரியூட்டுவதற்கான கட்டணம் குறித்து எல்பிஜி கேஸ் மற்றும் பிற செலவுகளை கணக்கிட்டு அறிவிக்கப்படும் என்றும் கூறினார். தெரு நாய்களை மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்றதில், தோராயமாக ஒரு லட்சத்திற்கும் மேல் உள்ளது எனவும் தெரு நாய்கள் இயற்கைக்கு பாதிப்பு இல்லாமல் இந்த மின் மயானத்தில் தகனம் செய்வதால் பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது என்றும் கூறியதுடன் இதே நிலை தொடர்ந்தால் கோவை புறநகர் பகுதியிலும் மின்மயானம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
சயனைடு கலந்த மதுவை குடித்த 2 பேர் பலி; தஞ்சையை தொடர்ந்து மயிலாடுதுறையில் சோகம்