மெட்ரோ ரயில், செம்மொழி பூங்கா, விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கோவை மாவட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியிலும் சரி, தற்போதைய திமுக ஆட்சியிலும் சரி மவாட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகள் அடுக்கடுக்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு பாலங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு ஒருசில பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு சில பாலங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே போன்று தற்போதைய திமுக ஆட்சியிலும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வருகிறது.
குறிப்பாக கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான அறிக்கை வருகின்ற 15ம் தேதி அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மொத்தமாக 32 நிலையங்களுடன், 39 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. இதே போன்று விமான நிலைய விரிவாக்க பணிக்கான நிலம் கையப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் விரைவில் விமான நிலைய விரிவாக்க பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் மேற்கு புறவழிச்சாலை, செம்மொழி பூங்கா பணிகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடங்கப்பட உள்ளன. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கிழக்கு புறவழிச்சாலை, சத்தி ரோடு விரிவாக்கம், 3 மேம்பாலங்கள் பணிகளுக்கான ஆயத்த வேலைகளும் நடைபெறுகின்றன. கோவை ரயில் நிலையம் மறுசீரமைப்புத் திட்டத்தில் அதிநவீன நிலையமாக மேம்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே 2 அடுக்குகள் கொண்ட மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஈரோட்டில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை; நண்பருடன் பேசியதை தந்தை கண்டித்ததால் விபரீதம்
கோவையில் மேற்கொள்ளப்படும் புதிய புதிய திட்டங்களால் நிலத்தில் முதலீடு செய்யும் நபர்கள் குறுகிய காலத்திலேயே நல்ல லாபம் ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது. தற்போது குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டங்கள் நிறைவு பெறும் பட்சத்தில் கோவை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்று நாட்டிலேயே நல்ல நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடிபோதையில் அடிக்கடி தகராறு; குடும்ப தலைவரை தீர்த்துக்கட்டிய மனைவி, மகன்கள்