விதியை மீறி அதிவேகமாக வந்த விரைவு ரயில்? பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த காட்டு யானை - ஆர்வலர்கள் ஆவேசம்

By Velmurugan sFirst Published May 7, 2024, 10:07 AM IST
Highlights

கோவை அருகே அதிவேகமாக வந்த விரைவு ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானை ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், போத்தனூர் முதல் கேரள மாநிலம் பாலக்காடு வரையிலான ரயில்வே வழித்தடத்தில் மதுக்கரை, வாளையாறு வரை உள்ள ரயில் பாதை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது. கோவையில் இருந்து செல்லும் பாதை ஏ லைன் எனவும், கேரளாவில் இருந்து வரும் பாதை பி லைன் எனவும் அழைக்கப்படுகிறது. இதில் வனப்பகுதி வழியாக  ரயில்கள் செல்லும்போது 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இரவு நேரங்களில் குறிப்பிட்ட வேகத்தை விட அதி வேகமாக ரயில்கள் இயக்கப்படுவதாகவும், இதனால் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதும் தொடர்வதாக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் 35க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. 

கடந்த 2021 நவம்பர் மாதம் மதுக்கரை அருகே உள்ள மாவுத்தம்பதி பகுதியில் ரயில் மோதியதில் கருவுற்ற பெண் யானை உட்பட 3 யானைகள் உயிரிழந்த நிலையில் பாலக்காடு ரயில்வே கோட்டம் சார்பில் இரயில் பாதையில் யானைகள் அதிகமாக தண்டவாளத்தை  கடக்கும் பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதியில்  யானைகள் இரயில் பாதையை கடக்கும் வகையில் இரண்டு இடங்களில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளன. மேலும் தமிழக வனப்பகுதியான மதுக்கரை வனச்சரகத்தில் ஏ.ஐ எனப்படும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

தொடங்கியது இ பாஸ் நடைமுறை; ஊட்டி, கொடைக்கானலில் சோதனை அடிப்படையில் வாகனங்கள் அனுமதி

யானைகள் வனத்தில் இருந்து வெளியேறி இரயில் பாதை அருகே வரும்போதே  அலாரம் மற்றும் எச்சரிக்கை செய்தி வனத்துறை மற்றும் இரயில்வே துறை அதிகாரிகளுக்கு சென்று விடுவதாலும் வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று யானைகள் இரயில் பாதையை கடக்க உதவி செய்வதால் யானைகள் இரயிலில் அடிபடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கேரள மாநிலம் வாளையாறு அடுத்த பன்னிமடை இரயில்வே கேட் அருகே பெண் யானை ஒன்று இரயில் பாதையை கடக்க முயன்றது. அப்போது பாலக்காட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற சென்னை மெயில் விரைவு இரயில் யானை மீது மோதியது. 

இதில் யானையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அந்த யானை அங்கிருந்து எழுந்து அருகில் உள்ள நீரோடைக்கு  சென்றது. மேலும் இரயில் மோதியதில் பலத்த காயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடியது. இது குறித்து இரயில்வே அதிகாரிகளுக்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் யானை பரிதாபமாக உயிரிழந்தது. தொடர்ந்து இது குறித்து பாலக்காடு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Child Death: வேலூரில் வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை பலி; தன்னிச்சையாக நடை பழகியபோது நிகழ்ந்த சோகம்

இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளில் பாலக்காடு -மதுக்கரை இடையே ரயிலில் அடிபட்டு 35க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது. வனப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யானைகள் இரயில் பாதையை இரவு நேரங்களில் கடக்கும் போது  அதிவேகமாக வரக்கூடிய இரயில்கள் மோதுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. 

இரவு நேரத்தில் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ள நிலையில் ஒரு சில ரயில் ஓட்டுநர்கள் இதனை கடைபிடிக்காததால், இது போன்ற விபத்துகள் ஏற்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு இடங்களில் யானைகள் இரயில் பாதை கடக்கும் வகையில் உயர் மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அதுபோக ஏ.ஐ எனப்படும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதே போல் கேரள வனப்பகுதிக்குள் யானைகள் கடக்கும் பகுதிகளை  கண்டறிந்து  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

click me!