யானைகளின் பெயரை கூறி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் வனத்துறை

By Dinesh TG  |  First Published May 6, 2024, 5:51 PM IST

பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு தொண்டாமுத்தூர் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 


புதிய யானை வழித்தடம் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டாமுத்தூர் விவசாயிகள் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அப்போது அங்கு திரண்டிருந்த விவசாயிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக வனத் துறை தமிழ்நாட்டில் புதிதாக 42 யானை வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக ஒரு செய்தி சில தினங்களுக்கு முன்பு செய்திதாள்களில் வெளியாகி இருந்தது. இதையடுத்து, தமிழக வனத் துறையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு இருந்த அந்த வரைவு அறிக்கையை நாங்கள் படித்து பார்த்தோம். அந்த அறிக்கையில் கோவையில் மட்டும் 4 புதிய யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எங்களுடைய விவசாய உறுப்பினர்களின் விவசாய நிலங்கள், வீடுகள், கோவில்கள் இருக்கும் பகுதியும் ஒரு யானை வழித்தடமாக குறிப்பிடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆய்வை தமிழக வனத் துறை மேற்கொண்ட போது எங்கள் பகுதி விவசாயிகள் ஒருவரிடம் கூட இது குறித்து கலந்து ஆலோசிக்கவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் ஒரு கருத்து கேட்பு கூட்டமும் நடத்தவில்லை. இதற்கு மாறாக, எங்கள் பகுதி நிலப்பரப்பையும், சுற்றுச்சூழலையையும் முழுமையாக அறியாத நபர்களை கொண்டு ஒரு தலைப்பட்சமாக இந்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.



நாங்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் பகுதிகளை அந்த குழுவினர் யானை வழித்தடமாக பரிந்துரைத்து இருப்பது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. அதுமட்டுமின்றி, இல்லாத யானை வழித்தடத்தை புதிதாக கண்டறிந்து அதை விரிவுப்படுத்த 450 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும் எனவும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

எங்களுடைய பெற்றோரும், முன்னோர்களும் பல தலைமுறைகளாக இங்கு விவசாயம் செய்து வருகின்றனர். அந்த வகையில், எங்கள் பகுதியில் யானைகள் இடம்பெயர்வதை நாங்கள் இதுவரை பார்த்ததும் இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை. சமீப ஆண்டுகளாக யானைகள் ஊருக்குள் வருவது தொடர்பாக செய்திகள் வெளிவருவதற்கு காரணம், வனத்துறையின் நிர்வாக சீர்கேட்டால் தான். யானைகளுக்கு தேவையான உணவுப் பயிர்களை வனப்பகுதிகளுக்குள் பயிர் செய்யாமல் தேக்கு, புளியமரம், ஈட்டி போன்ற மரங்கள் ஏக்கர் கணக்கில் வனப்பகுதிக்குள் பயிரிடப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதிக்குள் வன விலங்குகளுக்கு தேவையான அளவு தண்ணீர் வசதியையும் வனத்துறை உருவாக்கவில்லை. இதன் காரணமாக தான் யானைகள் வனப்பகுதியை விட்டு எங்களுடைய விவசாய நிலத்திற்கு வந்து எங்கள் பயிர்களை நாசம் செய்கிறது.

Tap to resize

Latest Videos

வருவாய் ஈட்டுவதில் 3வது இடம் பிடித்த கோவை ரயில் நிலையம்; ரயில்வே கோட்டமாக மாற்றம்? பயணிகள் எதிர்பார்ப்பு

எனவே இப்போது யானைகளின் பெயரை கூறி எங்களிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச விவசாய நிலங்களையும் பறிப்பதற்கு வனத்துறை திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து காலம் காலமாக விவசாயம் நடைபெற்று வரும் பகுதிகளை யானை வழித்தடம் என பரிந்துரைத்து இருப்பதை நாங்கள் எவ்விதத்திலும் ஏற்று கொள்ளமாட்டோம். யானைகளின் பெயரை பயன்படுத்தி எங்கள் நிலங்களை பறித்து, எங்களை இடம்பெயர வைக்க திட்டமிடுவது மனித உரிமைகளை மீறும் செயலாகும்.

அத்துடன், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில், மருதமலை கோவில், அனுவாவி கோவில், பண்ணாரி கோவில், பொன்னூத்து அம்மன் கோவில் என பல இந்து கோவில்கள் அமைந்துள்ள பகுதிகள் யானை வழித்தடப் பகுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது எங்களுடைய இந்து மக்களின் வழிப்பாட்டு உரிமையை பறிக்கும் முயற்சியாகவும் கருதுகிறோம்.

கோவையில் தடுப்பணையில் மூழ்கிய 3 சிறார்கள்; வெப்பம் தாங்காமல் நீர் நிலைக்கு சென்றபோது சோகம்

எனவே, எவ்வித முறையான கள ஆய்வும், உள்ளூர் மக்களின் கலந்தாலோசனையும் இன்றி தன்னிச்சையாக தயாரிக்கப்பட்டுள்ள ‘வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் - மருதமலை’ யானை வழித்தட பரிந்துரையை தமிழக அரசு ஏற்று கொள்ள கூடாது என வேண்டுகோள் விடுக்கிறோம்.

click me!