கோவையில் திமுக கவுன்சிலரின் வீட்டில் சோதனை மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள் ஆவணங்கள் எதையும் எடுத்துச் செல்லவில்லை என கவுன்சிலரின் கணவர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவையில் இன்று பல்வேறு இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 82 வது வார்டு கவுன்சிலர் முபசீரா இல்லத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. முபசீராவின் கணவர் ஆரிஃப், தியாகி குமரன் மார்க்கெட்டில் காய்கறி கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவரது கடைக்கு பக்கத்தில் கடை வைத்திருந்த சனோஃபர் அலி என்பவர் NIA விசாரணை வளையத்திற்குள் வந்ததால் அவர் தொடர்பான ஏதேனும் விஷயங்கள் ஆரிஃப் பிற்கு தெரிந்திருக்க கூடும் என்பதன் அடிப்படையில் விசாரணை நடந்ததாக தெரிகிறது.
சுமார் 3 மணி நேரம் சோதனை நடைபெற்ற நிலையில் சோதனை முடிந்து NIA அதிகாரிகள் சென்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆரிஃப், காய்கறி மார்க்கெட்டில் நான் பணிபுரியும் கடைக்கு அருகில் இருப்பவரை(சனோஃபர் அலி) NIA அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். அந்த கடைக்கு அருகில் நான் வேலை பார்த்து வருவதன் காரணத்தினால் எனக்கும், அவருக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் என்னிடம் விசாரணை நடத்தினார்கள்.
வீட்டில் சோதனை மேற்கொண்ட பிறகு எதுவும் இல்லை என அதிகாரிகள் கிளம்பிவிட்டனர். அரபிக் கல்லூரியில் படித்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அந்த கல்லூரிக்கு சென்றீர்களா என அதிகாரிகள் கேட்டனர்.
ஸ்கெட்ச் போடுவியா, இப்ப போடு பாப்போம்; வீரலட்சுமியிடம் ஆக்ரோஷமாக சீறிய நாம் தமிழர் கட்சியினர்
நான் போனதில்லை என்பதால் நான் அங்கு சென்றதில்லை என பதிலளித்தேன். கொரோனா இரண்டாவது அலையில் இருந்து சனோஃபர் அலியை எனக்கு தெரியும். மார்க்கெட்டில் பக்கத்து கடை என்பதால் அவரை எனக்குத் தெரியும் என அதிகாரிகளிடம் தெரிவித்தேன். வீட்டில் சோதனை மேற்கொண்ட பின்னர் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எதுவும் இல்லாததால் எதையும் அதிகாரிகள் எடுத்துச் செல்லவில்லை என தெரிவித்தார்.