கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இன்று அதிகாலை நான்கு மணி முதல் கோவையில் 33 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஒரு சில இடங்களில் சோதனையை நிறைவு செய்தனர்.
சோதனையில் ஆவணங்கள் சிலவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மொபைல் போன்கள், சிம்கார்டு, ஐடி கார்டு போன்றவைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையில் வெடிபொருட்கள் வைப்பதற்கான டிரம்களை நாசர் என்பவரிடம் இருந்து ஜமேசா முபின் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. கார் வெடி விபத்துக்கு முந்தைய நாள்தான் நாசரிடமிருந்து மூன்று டிரம்களை ஜமேசா முபின் வாங்கிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, கோவை உக்கடம் அல் அமீன் காலனி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ நாசர் என்ற நபரை தேசிய புலணாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
கோவை உக்கடம் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டு, என்ஐஏ அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் போலீசார் மேற்கொண்ட விசாரணையிலும் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் இன்று தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் 45 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு.. ஆக்ஷனில் இறங்கிய NIA.. தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சோதனை..!
குறிப்பாக கோவையில் மட்டும் 33 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கோவை உக்கடம், கோட்டை மேடு, ரோஸ்கார்டன், ஜி.எம்.நகர், குறிச்சி, சாய்பாபா காலனி, ரத்தினபுரி ஆகிய பகுதிகளில் சோதனை நடந்து வருகிறது. ஏற்கனவே என்ஐஏ சோதனைக்கு உள்ளானவர்களின் வீடுகள், தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரின் பட்டியல் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை உக்கடம் வின்சென்ட் சாலையில் சனாஃபர்அலி வீட்டில் நடந்த சோதனை காலை 7.30 மணிக்கும், கோட்டை மேடு பகுதியில் உள்ள ஜமேஷா முபீனின் உறவினர் அப்துல்மஜித் வீட்டில் காலை 10.30 மணிக்கும் சோதனை முடிந்தது.
உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியில் உள்ள நாசர் வீடு, குறிச்சி பகுதியை சேர்ந்த முகமதுபஷீர், அக்ரம்ஜிந்தா, சதாம் உசேன் (எ) ஜுவல்லரி சதாம், தாகா நசீர், ரசாக் பாஷா மற்றும் முகமது தௌபில் ஆகியோரின் வீடு உட்பட 33 இடங்களில் 7 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
சோதனையின் முடிவில்தான் என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகும். இந்த சோதனையில் 60 க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள்,100 க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.