பிரதமர் மோடி இன்று கோவையில் வாகன பேரணி நடத்தவுள்ள நிலையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவத்தால் கோவையில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் பிரதமர் மோடி இன்று மாலை வாகன பேரணியில் கலந்து கொள்கிறார். இதற்காக பேரணி நடைபெறும் பகுதி முழுவதும் ரெட் சோனாக அறிவிக்கப்பட்டு முழுவதும் பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. பேரணிக்கான பணிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில், கோவை ராமநாதபுரம் பகுதியில் தனியார் (அல்வேனியா) மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு இன்று பகல் மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளி நிர்வாகத்தின் இமெயில் குறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது வேறொரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், இந்த பள்ளியின் பெயர் இமெயிலில் டேக் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இங்குள்ள பள்ளிக்கு மெயில் வரவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் என செய்தி வெளியாகிய நிலையில் பெற்றோர்கள் பள்ளியின் முன்பு கூடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.