இரவு 10 மணிக்கு மேல் நான் பிரசாரத்தில் ஈடுபடாத நிலையில் காவல் துறையினர் ஒருதலைபட்சமாக செயல்பட்டு மீண்டும் தங்களை தடுத்து நிறுத்தி உள்ளதாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
கோவை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேற்று இரவு வழக்கம் போல் தனது பிரசார வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டு வந்தார். நேரம் இரவு 10 மணியான நிலையில், பேசுவதை நிறுத்திவிட்டு தொடர்ந்து பிரசார வாகனத்திலேயே நின்றுகொண்டு மக்களை சந்திக்கும் எண்ணத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை காவல் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய நிலையில், இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்வதற்கு அனுமதி கிடையாத என்று தெரிவித்தனர்.
இதனால் வேட்பாளர் அண்ணாமலைக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, நான் 10 மணிக்கு மேல் எந்தவொரு பகுதியிலும் பேசவில்லை. மைக்கை ஆஃப் செய்துவிட்டு என்னை பார்ப்பதற்காக நின்று கொண்டிருக்கும் தொண்டர்களை பார்த்து வணக்கம் வைத்து விட்டு செல்கிறேன். இது எப்படி பிரசாரமாகும்? ஒரு வேட்பாளர் 10 மணிக்கு பிரசாரத்தை முடித்துக் கொண்டு வாகனத்தில் வீட்டிற்கு செல்லும் போது டீ கடையில் டீ குடிக்கலாம். அது பிரசாரமாகுமா? என்று தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.
ஒரு கட்டத்தில் நான் செல்லவேண்டிய பகுதிக்கு நடந்தே செல்கிறேன் என அண்ணாமலை நடந்தே புறப்பட்ட நிலையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசமடைந்த அண்ணாமலை சாலை மறியலில் ஈடுபட்டார். இது தொடர்பாக அண்ணாமலை மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள விளக்கத்தில், “அற்ப காரணங்களுக்காக இன்று மீண்டும் எங்கள் பிரசார வாகனத்தை நிறுத்தியதால், காவல்துறையின் மூலம் திமுக அரசின் அத்துமீறல்கள் எல்லை மீறியுள்ளன. இரவு 10 மணிக்குப் பிறகு பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்ற காரணத்தின் கீழ் போலீசார் எங்கள் வாகனத்தை நிறுத்தினர். நாங்கள் பிரசாரம் செய்யவில்லை என்று விளக்கினாலும், எங்கள் வாகனத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன, மேலும் நாங்கள் எங்களுக்காக காத்திருந்த 2000 தொண்டர்களை சந்திக்க விரும்பினோம்.
காவல் துறையினரின் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கு அப்பாற்பட்டவை என்று காவல்துறை அதிகாரியிடம் விளக்கிய போதிலும், அவர்கள் எங்களை மாற்று வழியில் செல்லும்படி வற்புறுத்தினர்” என்று தெரிவித்துள்ளார்.