வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் கோவையை சேர்ந்த மூதாட்டி கண்ணீர் விட்டு அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. காலை முதலே பலரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
பொதுமக்கள் பாதுகாப்பாகவும், எளிமையாகவும் வாக்களிக்க பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் வேறு சில தகுதி வாய்ந்த ஆவணங்களை காட்டி பொதுமக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், பல்வேறு இடங்களில் ஏராளமானோரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நடிகர் சூரி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். குறிப்பாக, கோவையில் இந்த பிரச்சினை அதிக அளவு தலை தூக்கியுள்ளது.
அந்த வகையில், கோவையில் மகளிர் உரிமை தொகையில் வாழ்வாதரம் நடத்தி வரும் மூதாட்டிக்கு வாக்குரிமை கிடைக்காததால் அவர் கண்ணீர் விட்டு அழுதார். கோவை சுகுணாபுரம் பாலமுருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் குர்ஷித் பிவி (67). தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமை தொகையில் வாழ்வாதாரம் நடத்தி வருகிறார்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: 101 வயதில் வாக்களித்த முதல்வர் ஸ்டாலினின் தாய் மாமா!
இவை, இன்று தனது தங்கையுடன் சுகுணாபுரம் பள்ளியில் வாக்களிக்க வந்தார். ஆனால் அவரது பெயர் வாக்களர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால், அரசின் அனைத்து சலுகைகளும் கிடைத்த நிலையில், வாக்குரிமை கிடைக்கவில்லை என கூறி அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
முன்னதாக, கோவையில் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். பாஜக ஆதரவு வாக்களர்கள் பெயர் திட்டமிட்டே நீக்கப்பட்டு இருக்குமே என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.