வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளியை கரடி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளி, காலில் பலத்த காயத்துடன் பொள்ளாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் இரண்டு வட மாநில தொழிலாளிகளை சிறுத்தை கடித்து காயப்படுத்தியது. இந்நிலையில் வால்பாறை அருகே இஞ்சிபாறை எஸ்டேட் பகுதியில் குடியிருந்து வரும் ஐயப்பன் என்பவர் தேயிலை தோட்டத்தில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்
அப்போது எதிர்பாராத விதமாக தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த கரடி ஒன்று ஐயப்பனை தாக்கியது. கால் பகுதியில் கரடி கடித்ததால் படுகாயமடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு எஸ்டேட் மருத்துவமனையில் அனுமதித்து, பின்பு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐயப்பனை, திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர் மேலும், மருத்துவ சிகிச்சைக்காக திமுக சார்பில் 10 ஆயிரம் ரூபாய் நிவாரன தொகையாக வழங்கப்பட்டது