பேருந்து பயணியிடம் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்… ஹவாலா பணமா?

By Narendran SFirst Published Nov 10, 2022, 9:59 PM IST
Highlights

கோவை அருகே பேருந்தில் பயணம் செய்த நபரிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 80 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை அருகே பேருந்தில் பயணம் செய்த நபரிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 80 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பவர் கோவை பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் வைத்திருந்த கை பைக்கு டிக்கெட் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து நடத்துனர் கைப்பை வைத்திருந்த குமாரை பைக்கான டிக்கெட் எடுக்க வலியுறுத்தியுள்ளார். ஆனால் குமார் டிக்கெட் எடுக்க மறுத்ததை அடுத்து நடத்துனருக்கும் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு விவகாரம்… தமிழகத்தின் 43 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!!

இதையடுத்து நடத்துனர் பேருந்தை காவல் நிலையத்திற்கு விட்டு அங்கு குமார் மீது புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், சந்தேகத்திற்கிடமான அந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் சுமார் 80 லட்சம் ரூபாய் பணம் கட்டு கட்டாக இருந்தது தெரியவந்தது. அந்த பணம் குறித்து குமாரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பைனான்ஸ் வழங்குவதற்காக வைத்திருந்த பணம் என்று குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதே வேளையில் அவரிடம் பணத்திற்கான ஆவணங்கள் இல்லாததால் இது ஹவாலா பணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதையும் படிங்க: தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு!!

அதன் பேரில் அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 80 லட்சம் ரூபாய் பணத்தையும் குமாரையும் காவல்துறையினர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனிடையே பணத்திற்கான உரிய ஆவணங்கள் காண்பிக்காத பட்சத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அந்த குமார் கைது செய்யப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்படுவார் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!