கோவை அருகே பழைய ரூபாய் நோட்டுக்கு இரண்டு மடங்காக புதிய ரூபாய் நோட்டு தருவதாகக் கூறி ரூ.10 லட்சத்தை ஏமாற்றிய கும்பலை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 31). இவர் நாமக்கல்லில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். நந்தகுமாருக்கு திருப்பூர் கனியாம்பூண்டியைச் சேர்ந்த இலக்கியச்செல்வன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இலக்கியச்செல்வன் தன்னிடம் புதிய ரூபாய் நோட்டுகள் நிறைய இருப்பதாகவும், அதை செலவு செய்தால் தான் சிக்கிக் கொள்வேன் எனவும், பழைய ரூபாய் நோட்டுகள் எவ்வளவு கொடுத்தாலும் இரு மடங்காக தருவதாக தெரிவித்து ஆசை காட்டி உள்ளார்.
இவரின் வலையில் விழுந்த நந்தகுமார் தன்னிடம் இருக்கும் அனைத்து பணத்தையும் ஒன்று சேர்த்து 10 லட்சம் ரூபாய் கொடுத்து 20 லட்சமாக பெற்றுக் கொள்ளலாம் என எண்ணியுள்ளார். இதை தொடர்ந்து நந்தகுமார் ஜனவரி 25ம் தேதி கோவை, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசி அருகில் உள்ள தனியார் ஹோட்டல் முன்பு ரூ.10 லட்சம் பணத்துடன் நின்று கொண்டிருந்தார். அப்போது இலக்கியசெல்வன் காரில் வந்துள்ளார்.
முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக கோவை சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
இலக்கிய செல்வனின் காரை அவருடைய நண்பர் பாலா என்பவர் ஓட்டி வந்துள்ளார். தொடர்ந்து நந்தகுமாரிடம் இருந்த ரூ.10 லட்சம் பணத்தை பெற்ற, இலக்கியச்செல்வன் தனது காரில் வைத்துள்ளார். தொடர்ந்து இலக்கியச்செல்வன் காரில் இருந்த ரூ.20 லட்சம் பணம் போன்ற காகிதங்களை எடுத்துக்கொண்டு நந்தகுமாரின் காருக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது ரூ.10 லட்சம் பணத்துடன் இலக்கியச்செல்வனின் காரை பாலா வேகமாக எடுத்து சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து மற்றொரு காரில் வந்த மூன்று பேர் தாங்கள் போலீஸ் எனவும், சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்த நீ குற்றவாளி, உன்னை கைது செய்ய வந்துள்ளோம் என கூறி இலக்கியச்செல்வனை காரில் அழைத்துச் சென்றனர்.
10 லட்சம் பணம் கொடுத்துவிட்டு மீண்டும் கைக்கு எந்த பணமும் கிடைக்காமல் நண்பன் கைதாகி விட்டதை எண்ணி அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் சாலையில் கதறி அழுதுள்ளார். பின்னர் யோசித்து பாரத்த போது தான் ஏமாற்றப்பட்டு விட்டோமோ என சந்தேகம் அடைந்த நந்தகுமார் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் திருமுருகன் பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வழக்கில் தொடர்புடைய பாலா (31) என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
தொடர்ந்து போலீஸ் எனக் கூறி நாடகமாடி இலக்கியச்செல்வனை அழைத்துச் சென்ற கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த மீசை மணி (எ) தங்கமணி (58), பூபதி குமார் (52), விஜயகுமார் (37) ஆகியோரை கைது செய்தனர். இதில் தங்கமணி செக்யூரிட்டியாக பணியாற்றுவது தெரியவந்தது. அவர்கள் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான இலக்கியச் செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்.