கோவையில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் சிறுவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.
கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட குமிட்டிபதி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் (வயது 35). லாரி ஓட்டுநர். இவர் தனது உறவினர்களான ஜெய்குமரேசன் (32), கணேசன் (35), ஹரி (12) ஆகியோருடன் ஒரு காரில் வேலாந்தவளத்தில் இருந்து நாச்சி பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
கார் வேலந்தாவளம் -நாச்சிபாளையம் சாலையில் உள்ள மாஸ்தி கவுண்டன் பகுதியில் உள்ள வாத்தியார் தோட்டம் அருகே வந்த கொண்டிருந்தது. அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் குழாய்களை ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. லாரி மோதிய வேகத்தில் அந்த கார் நசுங்கியது.
இந்த கோர விபத்தில் காரை ஓட்டி வந்த சிவராஜ், ஜெய்குமரேசன், கணேசன் ஆகியோர் சம்பவ இடத்தலேயே பரிதாபமாக உடல் நசுங்கி இறந்தனர். படுகாயமடைந்த சிறுவன் ஹரி மீட்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கே.ஜி. சாவடி போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து கே.ஜி. சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.