கோவை சங்கனூர் அருகே குடும்ப தகராறு காரணமாக தூய்மை பணியில் இருந்த மாநகராட்சி பெண் ஊழியரை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கணபதி காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி அனிதா. மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். வடிவேலுக்கும், அனிதாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை அனிதா வழக்கம் போல பணிக்குச் சென்றுள்ளார்.
அப்போது வடிவேலு அவர் எங்கு வேலை செய்கிறார் என சக ஊழியர்களிடம் கேட்டு தேடிச் சென்றுள்ளார். அப்போது அனிதா பணியில் இருந்த சங்கனூர் நாராயணசாமி வீதியில் உள்ள பூங்காவிற்கு சென்ற வடிவேலு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அனிதாவின் தலையில் வெட்டியுள்ளார்.
விலை உயர்ந்த கேடிஎம் பைக்கை வாங்கி தர மறுத்த தாய்; இளைஞர் விபரீத முடிவு
இதையடுத்து அங்கிருந்து தப்ப முயன்ற அனிதாவை மீண்டும் துரத்தி வெட்ட முயலவே அங்கிருந்த பொதுமக்கள் கூடி வடிவேலுவை பிடித்து அவரிடமிருந்த அரிவாளை பிடுங்கினர். மேலும் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற ரத்தினபுரி காவல்நிலைய போலீசார் அனிதாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததுடன் அரிவாளுடன் கணவர் வடிவேலுவை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.