சென்னை நங்கநல்லூரில் எருமை மாடுகள் முட்டியதில் சாலையில் நடந்து சென்ற 63 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. சமீபகாலமாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் சில உயிரிழப்புகளும், பலர் காயமடைவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை நங்கநல்லூர் ஸ்டேட் பேங்க் காலணியில் சந்திரசேகர் (63) என்பவர் வசித்து வருகிறார்.
தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் நேற்று மாலை நங்கநல்லூர் எம்.ஜி.ஆர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக் கொண்டு ஓடி வந்த 2 எருமை மாடுகள், சாலையில் நடந்து சென்ற சந்திரசேகரை முட்டி தள்ளின. மாடுகளின் தாக்குதல் படுகாயமடைந்த சந்திரசேகர் அந்த பகுதியிலேயே மயங்கி விழுந்தார்.
பொங்கல் வரை போராட்டம் நீடித்தாலும் பயணிகளுக்கு சிரமம் இருக்காது - அமைச்சர் தகவல்
இதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சந்திரசேகரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சந்திரசேகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மாடு முட்டி சந்திரசேகரன் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை கண்டறியும் முயற்சியில் காவல்துறையினரும் மாநகராட்சி அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
Murasoli Building : முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா? சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
இதனிடையே நங்கநலூரில் கால்நடைகளின் தொல்லை அதிகரித்து வருவதாகவும், இதுகுறித்து புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். திருவல்லிக்கேணியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 80 வயது முதியவர் மாடு முட்டியதால் உயிரிழந்த நிலையில் தற்போது எருமை மாடுகள் முட்டி மற்றொரு முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.