ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..! சர்ச்சையில் சிக்கிய இலங்கை கேப்டன் சண்டிமால்

First Published Jun 21, 2018, 4:05 PM IST
Highlights
srilankan skipper chandimal appeal in icc against his ban


ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித், வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோரை தொடர்ந்து பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இலங்கை கேப்டன் சண்டிமாலுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரம் பூதாகரமாகியது. இந்த விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடையும் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தின் தாக்கமே இன்னும் ஓயாத நிலையில், இலங்கை அணி கேப்டன் சண்டிமாலும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் செயிண்ட் லூசியாவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 

இந்த போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது, இலங்கை அணியின் கேப்டன் சண்டிமால் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆட்டம் இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது. மீண்டும் போட்டி தொடர்ந்து நடத்தப்பட்டு டிராவில் முடிந்தது. 

பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் விசாரணை நடத்தினார். விசாரணையில், சண்டிமால் பந்தை சேதப்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவருக்கு 2 தகுதிநீக்க புள்ளிகள் வழங்கப்பட்டு ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தடைவிதிக்கப்பட்டதற்கு அடுத்து உடனடியாக வரும் போட்டியாக, மூன்றாவது டெஸ்ட் போட்டி உள்ளதால், அந்த போட்டியில் சண்டிமால் ஆட முடியாது. தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சண்டிமால், ஐசிசியிடம் மேல்முறையீடு செய்துள்ளார். அதனால் இதை விசாரிக்க ஐசிசி நியமிக்கும் சிறப்பு அதிகாரி விசாரணை நடத்தி, தடை தொடர்பான தீர்ப்பை வழங்குவார். 

கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி பல கோணங்களில் போட்டியை படம்பிடித்து பதிவு செய்துவரும் நிலையில், இதுபோன்று பந்தை சேதப்படுத்தினால் சிக்கிக்கொள்வோம் என்பதை அறியாமல் வீரர்கள் இப்படி செய்கின்றனரா? அல்லது கண்டிபிடித்தால் பிடிக்கட்டும் என்ற தைரியத்தில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனரா? என்ற கேள்வி எழுகிறது. 
 

click me!