தோகாவில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் 88.36 மீட்டர் எறிந்து 2ஆவது இடம் பிடித்தார்.
கத்தார் தலைநகர் தோகாவில் டைமண்ட் லீக் தொடர் நடைபெற்றது. இதில், ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான நீரஜ் சோப்ரா கலந்து கொண்டு விளையாடினார். இதில், அவர் 88.36 மீட்டர் தூரம் எறிந்து 2ஆவது இடம் பிடித்தார். 2 செமீ இடைவெளியில் முதலிடத்தை தவறவிட்டார். செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஜக்குப் வாட்லெஜ் 88.38 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். ஆனால், நீரஜ் சோப்ரா தனது கடைசி முயற்சியில் 88.36 மீட்டர் தூரம் எறிந்து 2ஆவது இடம் பிடித்தார்.
இது குறித்து பேசிய நீரஜ் சோப்ரா கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு எனக்கு மிகவும் முக்கியமான போட்டி பாரிஸ் ஒலிம்பிக், ஆனால், டைமண்ட் லீக் தொடரும் முக்கியமானது தான். இந்த முறை 2ஆவது இடம் பிடித்த நான் அடுத்த முறை வெகுதூரம் எறிந்து வெற்றி பெற முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.
undefined
இந்த போட்டியில் முதல் முயற்சியில் பவுல் வீசிய நீரஜ் சோப்ரா, 2ஆவது முயற்சியில் 84.93 மீட்டர், 3ஆவது முயற்சியில் 86.24 மீட்டர், 4ஆவது முயற்சியில் 86.18 மீட்டர், 5ஆவது முயற்சியில் 82.28 மீட்டர், கடைசியாக 6ஆவது முயற்சியில் 88.36 மீட்டர் தூரம் எறிந்து 2ஆவது இடம் பிடித்து அசத்தினார். முன்னாள் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 3ஆவது இடம் பிடித்தார். மேலும், அவரது பெஸ்ட் த்ரோவாக 86.62 அமைந்தது. இந்தியாவின் மற்றொரு வீரர் கிஷோர் ஜெனா 76.31 மீட்டர் தூரம் எறிந்து 9ஆவது இடம் பிடித்தார்.
பாகிஸ்தானை பந்தாடிய அயர்லாந்து – டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு எச்சரிக்கை மணி!