
Shreyas Iyer IPL 2025 Auction : ஐபிஎல் 2025 ஏலம் தொடங்கியவுடன், எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்ந்தன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழ்நிலையில், மற்ற அணிகள் ஷ்ரேயாஸ் ஐயரை அதிக விலைக்கு ஏலம் எடுப்பார்கள் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. ஐபிஎல் 2024-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் இருந்தார்.
அவரது தலைமையின் கீழ் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது. எனவே, இந்த முறை அனைவரின் பார்வையும் அவர் மீது இருந்தது. கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால இடைவெளிக்குப் பிறகு, அவர் நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தார். சனிக்கிழமை, அதாவது ஏலத்திற்கு முந்தைய நாள், சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் ஷ்ரேயாஸ் அபாரமான சதம் அடித்தார். இதன் விளைவாக, பல அணிகளின் கவனத்தை ஈர்த்தார்.
ஏலம் தொடங்கியவுடன், அவரை ஏலம் எடுக்க டெல்லி கேபிடல்ஸ் மற்று பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. எதிர்பாராத விதமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அவரை ஏலம் எடுக்க முயன்றது. ஆனால், இறுதியில் அவர்களால் முடியவில்லை. சாதனை விலைக்குப் பஞ்சாப் அணி அவரை வாங்கியது. ஷ்ரேயாஸ் ஐயரை 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
அதற்கு முன்னதாக வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் ரூ.18 கோடிக்கு ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி ஹைதராபாத் அணியிடமிருந்து திரும்ப பெற்றுக் கொண்டது. கஜிசோ ரபடாவை குஜராத் டைட்டன்ஸ் ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ.24.75 கோடிக்கு கேகேஆர் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை டெல்லி கேபிடல்ஸ் ரூ.11.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதே போன்று ஜோஸ் பட்லர் ரூ.15.75 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.