நீங்க என்னவேணா சொல்லிட்டு போங்க.. நாங்க செஞ்சது சரிதான்!! அடம்பிடிக்கும் ஆக்ரோஷ கேப்டன்

First Published Jul 19, 2018, 2:52 PM IST
Highlights
kohli justified the decision of dinesh replaced rahul


ராகுலுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டது சரிதான் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டிற்கும் குறைவாகவே உள்ள நிலையில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. எனவே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை அதன் முன்னோட்டமாக கருதி, தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியது. எனினும் 1-2 என தொடரை இழந்தது இந்திய அணி. 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்னை இந்த தொடரில் எதிரொலித்தது. டாப் ஆர்டர்கள் சோபிக்காத ஆட்டங்களில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நடு ஓவர்களில் சிறப்பாக ஆடி அணியை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். ரோஹித், தவான் ஆகியோரில் ஒருவர் கண்டிப்பாக அதிரடியாக ஆடிவிடுகின்றனர். மூன்றாவது இடத்தில் கோலி இறங்குவார். 

4 மற்றும் 5வது இடங்களுக்கான பிரச்னை நீடித்து வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கூட ரெய்னாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சரியாக இருப்பார் என சேவாக், காம்பீர் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். முதல் இரண்டு போட்டிகளில் ஆடாத தினேஷ் கார்த்திக்கிற்கு மூன்றாவது போட்டியில் ஆட வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. 

ரெய்னாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராகுல் நீக்கப்பட்டுவிட்டு தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.

ராகுல் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்க கூடாது. அவரை நிரந்தரமாக நான்காவது வரிசையில் களமிறக்க வேண்டும் என்பது பல முன்னாள் வீரர்களின் கருத்தாக உள்ளது. ஒரு போட்டியில் சரியாக ஆடாததால் ராகுலை நீக்குவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இளம் வீரரை இப்படி நடத்தக்கூடாது என லட்சுமண் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஆனால் போட்டி முடிந்ததுமே இதுகுறித்து கேப்டன் கோலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, ராகுலுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டது சரியான முடிவுதான். தினேஷ் நன்றாக ஆடுவார் என்று நினைத்தோம். அவர் நன்றாக தொடங்கினார்; ஆனால் அதை தொடரவில்லை என கோலி தெரிவித்தார். 

ரெய்னாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை சேர்த்திருக்க வேண்டுமே தவிர ராகுலை நீக்கிவிட்டு தினேஷ் கார்த்திக்கை சேர்த்திருக்க கூடாது என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாகவும் உள்ளது. 
 

click me!