எதிரணி யாரா இருந்தா என்ன..? என் இரண்டு தளபதிகள் இருக்காங்க.. அவங்க பார்த்துக்குவாங்க.. இங்கிலாந்தை தெறிக்கவிடும் கோலி

First Published Jun 30, 2018, 4:58 PM IST
Highlights
kohli has confident on kuldeep and chahal


எதிரணி எதுவாக இருந்தாலும் கவலையில்லை, அந்த அணியை விட நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே சம பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. ரோஹித், தவான், கோலி, ராகுல், ரெய்னா, தோனி, பாண்டியா என வலுவான பேட்டிங் வரிசையையும் புவனேஷ்வர் குமார், பும்ரா, உமேஷ் யாதவ், சாஹல், குல்தீப் என சிறந்த பவுலிங்கையும் இந்திய அணி கொண்டுள்ளது. 

இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய அணி தற்போது பவுலிங்கில் சிறந்த அணியாக திகழ்வதாக சச்சின் டெண்டுல்கரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அனைத்து வகையிலும் வலுவான திகழும் இந்திய அணி, மற்றொரு வலுவான அணியான இங்கிலாந்துடன் அவர்களின் மண்ணில் ஆட உள்ளது. ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து ஒயிட் வாஷ் செய்து அனுப்பியுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இங்கிலாந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கு பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, எங்களை பொறுத்தவரை எதிரணி எது என்பது விஷயமில்லை. இங்கிலாந்தும் அப்படித்தான். எங்களது பலம் என்ன என்பது தெரியும். அதில் கவனம் செலுத்துவோம். வலுவான பேட்டிங்கை பெற்றிருக்கிறோம். பவுலிங்கை பொறுத்தவரை இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இருப்பது எங்களுக்கு பெரிய பலமாக உள்ளது.

இங்கிலாந்து வலுவான அணிதான். ஆனால் அவர்களை எதிர்கொண்டு வீழ்த்த நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்போதைய அணியில் ஒவ்வொரு வீரரும் தங்களது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்படுகின்றனர். அது கேப்டனின் பணியை எளிமையாக்குகிறது என கோலி தெரிவித்தார். 

தென்னாப்பிரிக்க தொடரில் முக்கிய பங்காற்றிய சாஹல் மற்றும் குல்தீப் ஆகிய இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இங்கிலாந்து தொடரிலும் முக்கிய பங்காற்றுவார்கள் என நம்பப்படுகிறது. கேப்டன் கோலியும் அவர்கள் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறார். 
 

click me!