பவுலர்கிட்ட போயி தோனி ஏதோ சொன்னாரு.. நான் பயந்துட்டேன்!! ரோஹித்தும் அதையேதான் சொன்னார்.. இளம் வீரர் பகிரும் சுவாரஸ்யம்

By karthikeyan VFirst Published Aug 17, 2018, 3:03 PM IST
Highlights

இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷான், அவர் ஐபிஎல் தொடரில் ஆடவந்த புதிதில் தோனி செய்த சம்பவம் அவரை பாதித்தது குறித்தும் பின்னர் மனவலிமை பெற்றது குறித்தும் பகிர்ந்துள்ளார். 

இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷான், அவரது மனவலிமை குறித்து பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் இஷான் கிஷான், 2018 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடினார். அதற்கு முன்னதாக 2016 மற்றும் 2017 ஆகிய ஐபிஎல் தொடர்களில் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடினார். 

2016ம் ஆண்டு இஷான் கிஷான் தலைமையிலான 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி, ஜூனியர் உலக கோப்பையில், இறுதி போட்டியில் தோல்வியடைந்து ரன்னரானது. இந்திய அணிக்காக விரைவில் ஆட உள்ள இஷான் கிஷான், ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தனது மனநிலை முன்பை விட வலிமை அடைந்தது குறித்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய இஷான் கிஷான், நான் ஐபிஎல்லில் ஆடிய முதல் சீசனில், நான் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, எனக்கு பின் நின்ற விக்கெட் கீப்பர் தோனி, பவுலரிடம் சென்று ஏதோ பேசினார். அவர் பவுலரிடம் பேசியதுமே எனக்கு பதற்றமாக இருந்தது. தோனி ஏதோ சொன்னாரே..? என்ன சொன்னார் என்று தெரியவில்லையே என்ற நினைப்பில் பவுலர் எப்படி வீசினாலும் அவுட்டாகிவிடக்கூடாது என்ற மனநிலையில் கவனமாக நின்றேன். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியபோது, சில முக்கியமான தருணங்களில் சரியாக ஆட தவறிவிட்டேன். கிரிக்கெட்டை பொறுத்தவரை மனவலிமை மிக முக்கியம். நாம் நெருக்கடியாக உணரும்போது, அது நம்மை மட்டுமல்லாமல் நமது அணியையும் பாதித்துவிடும். அதுதான் எனக்கும் நடந்தது. 

பொதுவாக நான் நன்றாக ஆடினால் மகிழ்ச்சியாக இருப்பேன். சரியாக ஆடாவிட்டால், சோகமடைந்துவிடுவேன். ஐபிஎல்லில் ஆடும்போது என்னுடைய சகவீரர்கள், எப்போதுமே ஒரே மாதிரியாக இருக்குமாறு அறிவுறுத்தினர். மகிழ்ச்சியோ அல்லது சோகமோ, இரண்டில் எதுவாக இருந்தாலும் அடுத்த போட்டியின் ஆட்டத்தை அது பாதிக்கும். எனவே எப்போதும் ஒரே மாதிரியாக இருக்குமாறு அறிவுறுத்தினர். ரோஹித் சர்மாவும் அதே அறிவுரையைத்தான் கூறினார். தற்போது எனது மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. முன்பைவிட மனவலிமை பெற்றிருக்கிறேன் என இஷான் கிஷான் தெரிவித்தார்.
 

click me!